என்.பி.பியின் கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள் எங்கு சென்றன! அரசைக் கடுமையாக விமர்சித்த எம்.பி
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள் மற்றும் கடந்த இரண்டு வரவு - செலவுத் திட்டங்களில் அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெறும் அறிவிப்புகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கப்பலில் இருந்து இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகவும் கூறப்பட்ட போதிலும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீதான வற் வரியைக் குறைத்தல், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளையும் அரசு மறந்துவிட்டது.
அரச - தனியார் முதலீட்டுச் சட்டம், முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம், புதிய வர்த்தக வணிக முகாமைத்துவச் சட்டம், தேசிய கணக்காய்வுச் சட்டத் திருத்தம், எரிசக்தி மாற்றச் சட்டம் மற்றும் டிஜிட்டல் சட்டம் ஆகியவை வெறும் அறிவிப்புகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பாரிய நிதி மோசடிகள்
பணவீக்கம் 8-9 சதவீத மட்டத்தில் உள்ள நிலையில், அரசு வரியையும் பொருள்களின் விலைகளையும் அதிகரித்து மக்களைத் துன்புறுத்தித் திறைசேரியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.
கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 13 சதவீதத்தைக் கூட அரசு செலவிடவில்லை. 70 ஆண்டுகால சாபத்தை ஒழித்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்போம்" எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசின் கீழும் பாரிய நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன.

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான குழு அறிக்கை வெளியிடப்படாமை, திறைசேரியிலிருந்து 2.5 பில்லியன் டொலர்கள் காணாமல்போனமை மற்றும் தபால் திணைக்களத்தில் 6 இலட்சம் டொலர்கள் அஸ்தானகதமானமை குறித்து எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
18 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய நிலக்கரி மோசடி மற்றும் டீசல் மின்நிலைய பராமரிப்பு நட்டம் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்ட போதிலும், இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
சபாநாயகர் விவகாரம் மற்றும் பல்வேறு தரப்பினரின் முறைகேடுகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், சட்டம் அனைவருக்கும் சமம் எனில் அரசு உடனடியாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு அரசு மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஏனைய தரப்பினரின் இராஜதந்திரத் தலையீடுகளும் காரணமாக அமைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டமொன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அரசு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினால் மட்டுமே வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது குறித்தோ அல்லது பேச்சுகளில் பங்கேற்பது குறித்தோ பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.