வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நடந்த தேநீர் விருந்து! புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்
நேற்று வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதம எதிர்க்கட்சிக் கொறடா கயந்த கருணாதிலக்க, வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து SJB நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தேநீர் விருந்தில் கலந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தேநீர் விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.