அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் தடைகளுக்கு எதிராக ஐ.நாவிடம் ஈரான் முறைப்பாடு
ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறை மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக சர்வதேச விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
ஈரானிய விமானத் துறையின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அமெரிக்கா விதித்துள்ள சட்டவிரோதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகச் செயற்படவும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் உத்தியோகபூர்வ எதிர்ப்பு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் அபுசார் ஷிரூடி தெரிவித்துள்ளார்.
கனடாவின் மொன்றியல் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பானது, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு முகவர் அமைப்பாகும்.
புதிய கட்டுப்பாடு
வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து, நெதர்லாந்தின் நெதர்லாந்து ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் (ICJ) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஷிரூடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய விமானச் சேவை நிறுவனங்களுடன் தொடர்ந்து வணிகத் தொடர்புகளைப் பேணும் சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அமெரிக்கா, இம்மாத தொடக்கத்தில் ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறை மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.