பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தாயக அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: தமிழ் கட்சிகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என வடக்கு - கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புகுழு தமிழ் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதலாக கட்சித் தலைமையை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
சிறிதரனின் கடப்பாடுகள்
இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல்மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறிதரன் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன.
இந்நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சியொன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும், அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை வலியுறுத்துகிறோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
