சீனாவின் திடீர் தாக்குதலைச் சமாளிக்க தாய்வான் இராணுவம் புதிய உத்தியுடன் போர்ப் பயிற்சி
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தாய்வான் இராணுவம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு "உடனடி போர் தயார்நிலை பயிற்சியை" நடத்தவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
தாய்வானைத் தனது சொந்தப் பகுதி என உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபகாலமாக தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, சீனா தனது வழக்கமான இராணுவப் பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் தாய்வான் மீதான நேரடித் தாக்குதலாக மாற்றக்கூடும் என்ற போர்க்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, அதற்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்த சிறப்புப் பயிற்சியை தாய்வான் இராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஐந்து நாள் பயிற்சியானது வழக்கமான சம்பிரதாயப் பயிற்சிகளாக இல்லாமல், நவீனப் போர்ச் சூழலுக்கு ஏற்ப மிகவும் யதார்த்தமான முறையில் அமையவுள்ளது.
நேரடிப் பயிற்சி
இதில் உண்மையான இராணுவ வீரர்கள், உண்மையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட போர்க்களப் பகுதிகளில் களமிறங்கி நேரடிப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
அமைதிக்காலத்திலிருந்து போர்க்கால நிலைக்கு இராணுவத்தை மிக விரைவாக மாற்றுவது, முப்படைகளின் கூட்டு கட்டளைத் திறனை மேம்படுத்துவது மற்றும் போர்க்களத் தயாரிப்புகளை வலுப்படுத்துவது ஆகியவையே இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
தாய்வான் இராணுவம் அண்மையில் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஹிமார்ஸ்' ஏவுகணை அமைப்புகளை தாய்வான் நீரிணைப் பகுதியில் சோதித்திருந்த நிலையில், வரும் ஓகஸ்ட் மாதத்தில் அதன் முக்கிய வருடாந்திர 'ஹான் குவாங்' போர் விளையாட்டுகளும் நடத்தப்படவுள்ளன.
தாய்வானின் இந்த போர்ப் பயிற்சி அறிவிப்பு வெளியான அதே நாளில், சீனா தனது 21 அதிநவீன போர் விமானங்களை தாய்வான் வான் எல்லைக்கு அருகே அனுப்பி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஜே-16 ரக போர் விமானங்கள் மற்றும் வான்வழி எரிபொருள் நிரப்பும் ஒய்-20 விமானங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் 19 விமானங்கள் தாய்வானின் தென்மேற்கு வான்பரப்பைக் கடந்து மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீண்ட தூரப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
சீனாவின் இந்த தொடர் gray zone (சாம்பல் மண்டல) உத்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தாய்வானும் தனது பாதுகாப்புப் படைகளை எல்லையில் நிலைநிறுத்தி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் இப்பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.