பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு
அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் கொள்ளுப்பிட்டி முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் டி.கே.எம்.பிரேமசிறி என்பவரே இதன் போது காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபரீத முடிவு
குறித்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட T-56-5106523 எனும் இலக்கத்திலான துப்பாக்கியால் குறித்த கான்ஸ்டபிள் நேற்று முன்தினம் H1 நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள பகுதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மருத்துவமனையில் இருக்கும் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபோது, ஆறு மாதங்களுக்கு முன், தன் தாய் இறந்து விட்டதாகவும், தாய் இறந்த பின், தந்தை பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வீட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சகோதரனுடன் தொடர்ந்து முரண்பாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம்
இந்த சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தமும், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி மேலும் கூறினார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.