முறைப்பாடு செய்ய சென்ற நபரை கொடூரமாக தாக்கிய பொலிஸார் : மாயமான பெருந்தொகை பணம்
கிரியுல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரொருவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த நபர் வைத்திருந்த பணத் தொகையும் காணாமல் போயுள்ளது.
கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்து ஐந்து நாட்கள் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
துன்புறுத்திய பொலிஸார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 24ஆம் திகதி குறித்த நபர் தன்னுடைய தம்பிக்காக, பிறிதொரு தரப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக கிரியுல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அவருடைய பணப் பையில் 30 ஆயிரம் ரூபா பணமும் இருந்துள்ளது.

இந்தநிலையில், அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான போதையில் இருந்ததாகவும், முறைப்பாடு செய்யச் சென்ற தன்னை போதைப் பொருள் வியாபாரி எனக் கூறி முறைப்பாட்டினையும் எடுக்காமல் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், முறைப்பாடு செய்வது என்றால் வேறு ஏதாவது பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், “நீ ஒரு போதைப் பொருள் பாவனையாளரா..” எனக் கேட்டு கேட்டு மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னை இத்தோடு கொன்று விடுவதாகவும், தன்னால் முடியாத நிலையில் தண்ணீர் கேட்ட போது கழிவறையில் இருக்கும் குழாயில் தண்ணீர்ப் பிடித்து அருந்துமாறும் தன்னை துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
சமாதானம் பேசிய அதிகாரிகள்
ஒரு கட்டத்தில் தாக்குதலை தாங்க முடியாமல் சிறைக் கூடுக்குள் தான் மயங்கி விழுந்ததாகவும், அதன் பின்னர் வலி தாங்க முடியாது கத்திக் கூச்சலிட்ட பின்னர் தான் தன்னை வைத்தியசாலைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வந்த சமயம் தன்னுடைய பணப் பையில் 30 ஆயிரம் ரூபா பணம் வைத்திருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து அதில் இருந்து 25 ஆயிரம் ரூபா பணம் காணாமல் போனதுடன், 5 ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே மிகுதியாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
குறித்த 30 ஆயிரம் ரூபா பணம், தன்னுடைய பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் என்றும், தேங்காய்கள் பறித்து கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தான் தன்னுடைய வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது மதுபோதையில் இருந்த பொலிஸாரால் காரணமேயின்றி தான் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு நீதி கோரியும், காணாமல் போன தன்னுடைய பணத்தினை மீள தருமாறும் பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பின்னர் கிரியுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று, அவருடைய மனைவியிடம் சமாதானம் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தங்களுக்கு குடியிருக்க நல்லதொரு வீட்டினைக் கட்டிக்கொள்வதற்கான உதவிகளை செய்வதாக பொலிஸார் தெரிவித்ததுடன், காணாமல் போன பணத்தினையும் மீளப் பெற்றுக்கொடுப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்ததுடன், சம்பவம் தொடர்பில் மேலதிகமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தன்னுடைய மனைவியிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan