தொடர்ச்சியாக மூன்று முறை அதிகரிக்கப்பட்டுள்ள இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம்
ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கியது எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரம் தான் என பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்கள் எமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே, சம்பள உயர்வுகளைக் கோருகின்றனர். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கத்திடமும் அவர்கள் இவ்வாறு சம்பள உயர்வுகளைக் கோரவில்லை.
சம்பள உயர்வு கோரிக்கை
அதற்குக் காரணம், முந்தைய அரசாங்கங்களிடம் சம்பள உயர்வுகளை வழங்குவதற்குப் போதிய நிதி இருக்கவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அரசாங்கங்களாகவே அவை காணப்பட்டன. இரண்டாவது, நிதி இருந்தபோதும் சில அரசாங்கங்கள் அதனை வழங்குவதற்கு முன்வரவில்லை.
எனவே அரச ஊழியர்களுக்கு எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் சம்பள உயர்வுகளைக் கோருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக சம்பள உயர்வுகளை வழங்கிய அரசாங்கம் நாமே. அதேபோன்று, அரச ஊழியர்கள் எதிர்கொண்டுவரும் அனைத்து சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். அவற்றை நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.
இருப்பினும், சில பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்க முடியாது. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குச் சிறிது காலம் தேவைப்படும். இதற்காகவே, நாங்கள் சம்பள ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அதன் ஊடாக நீண்டகாலமாக நிலவிவரும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிய முடியும்.
குறுகிய காலத்தில் நாங்கள் அடிப்படைச் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். குறிப்பாக மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில், அடிப்படையச் சம்பளம் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கும் சில தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்கும் இடையில் ஒற்றுமை இல்லை. இதற்குக் காரணம், சில தொழிற்சங்கவாதிகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். அவர்கள் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றனர்.
அவ்வாறு அரசியல் செய்வதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதேபோன்று, எந்தவொரு அரச ஊழியருக்கும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பத்றாகன முழு உரிமையும் இருக்கின்றது.
ஆனால், ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.