திருகோணமலையில் துறைமுக எரிசக்தி அபிவிருத்தி: கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு போராட்டமாக மாறுமா..!
"வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என அங்கலாய்க்கின்ற போது அபிவிருத்தி திட்டங்களின் வருகையால் இதன மூலம் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா என்ற அங்கலாய்ப்பும் கடற்தொழிலாளர் சமூகத்திடம் இருந்தே வருகிறது" இதற்கு திருகோணமலை மாவட்ட சீனக்குடா பகுதி கடற்தொழிலாளர்களும் விதிவிலக்கல்ல.
அதனடிப்படையில் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் மையம் அமைப்பது தொடர்பான சந்திப்பு ஒன்று (2026 ஒக்டோபர் 14ஆம் திகதி) அன்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் பீட்டரிஸ் உஸ்டுப்ஸ் (Peteris Ustubs) தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றனர். இச்சந்திப்பில் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல்
இதன்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, எரிசக்தி சேமிப்பு மற்றும் பசுமை எரிசக்தி மாற்றம் தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பசுமை எரிசக்தி மையமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் Global Gateway ஊடாக துறை முக அபிவிருத்தி ஊடாக இடம் பெறவுள்ளது.Global Gateway என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு மூலோபாயமாகும். இதன் முக்கிய நோக்கம் 2021 முதல் 2027ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் சுமார் 300 பில்லியன் யூரோ பெறுமதியான முதலீடுகளைத் திரட்டுவதாகும்.
இத்திட்டத்தின் கீழ் முக்கியமாக ஐந்து துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணைய இணைப்பு, காலநிலை மாற்றத்தைக் கருத்திற்கொண்ட பசுமை எரிசக்தி, போக்குவரத்து மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுகாதாரத் துறை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகும். இவ்வாறான நிலையில் திருகோணமலை இயற்கை துறை முகத்தினை கொண்டு பாரிய திட்டமாக இத் திட்டம் நடைமுளைப்படுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து மூலமான வளி மாசடைவதை தடுப்பதற்காக பசுமை எரிசக்தி ஹைட்ரஜனை குறித்த மையத்தில் உருவாக்கும் திட்டமாக அமையவுள்ளதுடன் குறித்த சந்திப்பில் திட்டம் தொடர்பான சாத்தியமான ஆய்வொன்றை நடாத்துவது தொடர்பிலும் துறைசார் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி
இவ்வாறான நிலையில் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் அபிவிருத்திகளை வரவேற்பதாக இருந்தாலும் அதன் மூலம் சமூகத்தை பாதிக்காத திட்டத்தை நடைமுறைபடுத்துவது சிறந்தது என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையினர் துறைமுக அபிவிருத்திஎனக் கூறிக் கொண்டு மக்களின் வாழ்வாதாரக் காணிகளை கையகப்படுத்தி தமது செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றனர். இதன் போது ஏழை மக்களின் வாழ்க்கையை அழிக்கின்றனர். கடந்த வருடம் முத்துநகர் விவசாயக்காணியை சூரிய மின் திட்டத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு கையளித்தனர்.
இதேவேளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களால் தாம் ஏற்கனவே எதிர்கொண்ட பாதிப்புக்கள் குறித்து சுட்டிக்காட்டிய திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக பெண் செயற்பாட்டாளர் சஹீலா சபூர்தீன் பின்வருமாறு தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் பசுமை எரிசக்தி மையம் அமைப்பது தொடர்பில் இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் நடாத்தியிருந்தது இது தொடர்பில் அபிவிருத்தி திட்டங்கள் வரவேற்கப்பட்டாலும் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்ட கூடாது என்பதை மேலுள்ள பெண் சமூக செயற்பாட்டாளரின் கருத்து இங்கு சுட்டிக் காட்டுகிறது.

திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து மேலும் சுட்டிக்காட்டிய அவர் இன்று வரை அரசாங்கம் பாதிப்புக்கான நஷ்ட ஈடோ மற்றும் மாற்றுக் காணிகளையோ இதுவரை சட்டபூர்வமாக பாதிப்புற்ற விவசாயிகளுக்கு தரவில்லை. நாட்டின் அபிவிருத்தி என்றால் ஏழைகள் வயிற்றில் அடித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு செல்வந்தர்களையும் பண முதலைகளாக்குவதுதான் நாடு அடைகின்ற அபிவிருத்தியோ? சொல்லப் போனால் சிறந்த காணிக் கொள்கை ஒன்று இல்லாது அவ்வப்போது ஆளும் அரசுகள் தமக்கு ஏற்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் ஆக்குவதும் கொழும்பில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் கொந்தராத்து நிறுவனங்களுடன் அரசியல்வாதிகள் சேர்ந்து வெளிப்படைத் தன்மையற்ற இரகசிய திட்டமிடல்களை மேற்கொண்டு நாட்டிக் முதுகெலும்பாக உழைக்கும் வர்க்கத்தின் உயிரை எடுக்கின்றனர் என்றேதான் கூற வேண்டும்.
பாட்டாளி மக்களின் நிலங்கள் சூரிய மின் சக்தி திட்டம், காற்றாலை மின் திட்டம் (மன்னார்) என அபகரிக்கப்பட்டதினால் இவர்களின் குடும்பங்கள் இன்று மதிய நேர சோறு மட்டும் என்றாவது உண்ண வழி இன்றியும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப இயலா மலும் இம் மழை காலத்தில் மிகுந்த வறுமைக் கோட்டின் கீழ் அல்லல்பட்டு வாழ்க்கையைக் கழிக்கின்றனர். இதனை இந்த அரசு கண்டு கொள்ள வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும். ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்க முதலீட்டாளர்களையே அரசு வாழ வைக்கின்றது.
எரிசக்தி மையங்களை நிறுவ மக்களின் ஜீவனோபாயக் காணிகள்தான் சூறையாடப்பட வேண்டுமா? அதற்கும் கிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் உழுதுண்டு வாழும் பூமிதான் வேண்டுமா? திருமலை மாவட்ட வட மத்திய எல்லைப்புறங்களில் காடுகள் போதுமான அளவில் உள்ளனவே. இந்த நாட்டின் பிரஜைகளான எங்களை ஏன் அரசு புறக்கணிக்கின்றது"எனவும் தனது கருத்தை பதிவு செய்தார்.
பெறப்பட்டுள்ள விவசாய காணிகள்
இங்கு கூறிய கருத்தின் பிரகாரம் முத்து நகரில் இலங்கை துறை முக அதிகார சபை தனியார் நிறுவனங்களுக்காக விவசாய காணிகளை சுமார் 800 ஏக்கரளவில் விவசாயிகளை வெளியிள் துரத்தி பெற்றுள்ள நிலையில் தற்போது 200ஏக்கரில் மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய மின் சக்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் 352 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த திட்டம் ஆரப்பிக்கப்படுவதற்கு முன்னர் சூழலியல் தாக்க மதிப்பீடு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை,கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அனுமதி பெறப்பட்டு மக்கள் பங்கேற்புடனான கருத்துக்களும் பெறப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நியாயமான மாற்றங்களுடன் இடம் பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் பசுமை எரிசக்தி மையம் (Green Energy Hub) ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு இடம் பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் பலரும் பல கருத்துக்களை மேலும் தெரிவிக்கின்றனர். கப்பல் துறை போக்குவரத்தினை மையமாக கொண்ட குறித்த திட்டத்தின் ஊடாக திருகோணமலையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான முக்கிய மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள பகுதி இயற்கையான கடலால் சூழப்பட்ட துறை முகத்தையும் கடல் வளத்தையும் கொண்டுள்ளது. இங்கு கடற்தொழிலாளர்கள் அதிகம் அன்றாடம் இங்குள்ள கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி மீனவரான ஏ.ஆர்.எம்.றில்வான் இவ்வாறு தெரிவிக்கிறார்.
தற்போது ஓரளவாக மீன் பிடி தொழில் நடைபெறுகிறது .ஒரு நாளைக்கு 2000, 3000 ரூபா வரை வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் துறை முக அபிவிருத்தி என்ற போர்வையில் பசுமை எரிசக்தி மையம் அமைப்பதனால் எங்கள் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட கூடாது. அபிவிருத்தி என்பதை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் தொழில் இதன் மூலம் பாதிக்கப்பட கூடாது இது தான் எங்கள் வாழ்வாதாரம் கடந்த காலத்தில் துறை முக பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க எங்களிடம் ஆலோசனை கேட்டார்கள் நாங்களும் சம்மதத்தை தெரிவித்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்.
இங்கு கொடுவா மீன் வளர்ப்பதால் அப்பகுதியில் பாறை போன்ற மீன்கள் கூடுகளுக்கு கீழ் காணப்படும் அதனை நீங்களும் பிடிக்கலாம் என்று கூறி விட்டு தற்போது அப்பகுதிக்கு செல்ல முடியாது தடை விதித்துள்ளார்கள். இது போன்று மீன் பிடியில் ஈடுபடும் துறைமுக பகுதியில் கப்பல் ஒன்றை நிறுத்தியுள்ளார்கள் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக இது இங்குள்ளதால் அதனை சூழவுள்ள பகுதிக்கு செல்ல முடியாது எனவே தான் அபிவிருத்தி திட்டத்தை கொண்டு வந்தால் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறிய அவர் அரசாங்கம் மூலமாக கிடைக்கப் பெற்ற 25 கடற்தொழிலாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மீன் பிடி வலைகள் வாழ்வாதாரமாக அண்மையில் கிடைக்கப்பெற்றதாகவும் கூறினார்.
இருந்த போதிலும் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தால் மீன் பிடி தொழிலுக்கு பாதிக்காத வண்ணம் திட்டங்களை செய்ய வேண்டும் இல்லாது போனால் எமது பகுதியில் உள்ள சுமார் 300மீனவக் குடும்பங்களும் பாதிக்கப்படலாம் என கூறினார்.
இலங்கையின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை
கடற் தொழில் அமைச்சின் 2024ம் ஆண்டின் தகவலின்படி கொட்டியாரக்குடா,சீனக் குடா, கிண்ணியா உள்ளிட்ட மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 11 மீன் பிடி கிராமங்களும் 121 மீன்பிடி தளங்களும் காணப்படுகிறது. 28070 கடற்தொழிலாளர்களும் உள்ளனர். மொத்தமாக 356 உள்நாட்டு மீன் பிடி படகு காணப்படுவதுடன் இங்கு பாரம்பரிய இயந்திரம் மற்றும் இயந்திரமற்ற,கரை வலை படகு உள்ளிட்ட படகுகளும் காணப்படுகிறது. குறித்த திட்டம் மூலமாக பல நல்ல விடயங்களை எதிர்பார்த்தாலும் அப்பகுதியில் உள்ள மக்கள் இதன் மூலம் பாதிக்கப்பட கூடாது என்பதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் குறித்த திட்டம் மூலம் இலங்கையின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையில் நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

புதிய முதலீடுகள் மற்றும் தொழில்துறை அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகலாம். திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் கட்டுமானம், தொழில்நுட்பம், பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றியுள்ள உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஒட்டு மொத்தமாக இத் திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
எது எவ்வாறாக இருப்பினும் அபிவிருத்தி என்ற போர்வையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் இங்கு இடம் பெறுமானால் மீன் பிடி தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் ஏன் எனில் மீன் பிடி பகுதியானது துறை முக பகுதியை அண்டிய கடற்பரப்பில் இடம் பெறுகின்றன இதன் மூலம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் எங்களது தொழில்களை செய்ய விடாது பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். எங்களுக்கான அன்றாட ஜீவனோபாயமாக மீன் பிடி தொழில் இருக்கிறது வாழ்வாதாரங்களை அழிக்காமல் அபிவிருத்தி இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் எனவும் மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட ஜெ.எம்.பாஹிம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள் மூலமாக அதிக நன்மைகள் கிடைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு ஒரு புறமிருந்தாலும் இது போன்ற மீனவச் சமுதாயம் பாதிக்கப்பட கூடாது என்பதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் நிலையை அறிய முடிகிறது.
இது தொடர்பில் திருகோணமலை பகுதியை சேர்ந்த சிவில் சமூக பெண் செயற்பாட்டாளர் பிலிப்ஜோன் விசோபா தெரிவிக்கையில் " சமூக, பொருளாதாரத்தில் குறிப்பிட தக்க சாதகமான வளர்ச்சி நிலை காணப்பட்டாளும் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட உள்ளூர் கடற்தொழிலாளர்களின் அன்றாட பொருளாதாரம் பாதிக்கப்படும். இயற்கையான கடல்வளம் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்படும் என்றும் அதேவேலை திருகோணமலைத் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தை உருவாக்குவது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், கிழக்கு மாகாணத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அபிவிருத்தி போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தாலும், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் காணி உரிமைகள் மற்றும் சமூகக் கலாசார விழுமியங்கள் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையின் நிலை கேள்விக்குறியே! இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகம், இலங்கையின் மிக முக்கியமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.
துறைமுக அபிவிருத்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி நடவடிக்கை
இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பொருளாதார, வர்த்தக, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. துறைமுக அபிவிருத்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி நடவடிக்கையின் போது பல்வேறு வகையான கழிவுகள் உருவாகும். நிர்மாணப் பணிகளின் போது உருவாகும் கழிவுகளால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும். அத்தோடு கரையோர மக்களின் சுகாதாரமும் பாரியளவில் பாதிக்கப்படும். அது மடுமல்லாது பாரம்பரியமாக மீன்பிடியை தொழிலாக கொண்ட கடற்தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
கடற்தொழிலாளர்கள் தற்போது சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கடற்பிராந்தியங்கள் அதியுயர் கட்டுப்பாட்டு பகுதியாகவும், அதியுயர் பாதுகாப்பு வலையமாகவும் மாற்றப்பட்டு மீன்பிடிக்கு தடைவிதிக்கப்படும். இதன் விளைவாக திருகோணமலை மக்களின் பொருளாதார நிலை சீர்குலைவதோடு மட்டுமல்லாது சொந்த நாட்டிலேயே மீண்டுமொரு இடப்பெயர்வும் அகதி நிலையும் உருவாகும் அவலம் உண்டாகும் எனவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பாதகமான விளைவுகள் தொடர்பிலும் வலியுறுத்தி கூறியதாவது, அத்தோடு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து திருகோணமலை நோக்கி வருபவர்கள் பின்நாட்களில் எமது நகரத்தையும் கலாச்சாரத்தையும் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனுடன் தொடர்புடைய குடியேற்றங்களால் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளில் மாற்றம் மற்றும் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் என்பன தமிழர்களின் அரசியல், பொருளாதாரம்,கலாச்சாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட பெருமளவில் வாய்புகள் உள்ளது எனவும் கூறினார்.

பசுமை எரிசக்தி என்பது எமது நாட்டை பொறுத்தமட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியாக காணப்பட்டாலும் இதில் சூரிய மின் சக்தி மற்றும் காற்றாலை எரிசக்தி உள்ளிட்ட திட்டங்கள் வடகிழக்கில் மக்கள் எதிர்ப்பினை கொண்ட வகையில் நடைபெறுகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த திட்டம் தொடர்பில் சமூக, பொருளாதார மாற்றம் ஏற்படுமாக இருந்தால் இவ்வாறு மாற்றங்களை கண்டு கொள்ள முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் இது குறித்து தெரிவிக்கையில், டீசல் இறக்குமதி மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்து மின்சார உற்பத்தியை பெறுவதால் நிறைய டொலர்கள் நாட்டை விட்டு வெளியில் செல்கின்றன. பசுமை எரிசக்தியை பொறுத்தமட்டில் டொலர் மீதமாக்கப்படுகிறது. இது நாட்டுக்கு நல்லதாக அமைகிறது.
நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தி காரணமாக சூழலுக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.ஆனால் பசுமை உற்பத்தி முன்னெடுப்பானது சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது இது அப்பகுதி பிரதேச மக்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.சமூக பொருளாதார மாற்றம் என்ற வகையில் பசுமை முன்னெடுப்பு மூலமாக சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது.
இவ்வாறான திட்டம் மூலம் பிரதேச மக்களுக்காக வேலைவாய்ப்பு உருவாகும்,குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கும், வறுமை நிலை குறைவடையும் மற்றும் நாட்டின் அந்நியச் செலாவணி ஏற்படும் எனவும் பசுமை எரிசக்தி மைய உற்பத்தி திட்டம் இடம் பெறுமானால் நிச்சயமாக பாரியளவிலான தாக்கங்கள் ஏற்படாது என்றும் மேலும் கூறினார்.
ஒட்டுமொத்தமாக துறை முக அபிவிருத்தி மூலமாக பசுமை எரிசக்தி சேமிப்பு மையம் மூலமாக பல நல்ல விடயங்களை எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஏகோபித்த முடிவு மூலமாக இத் திட்டம் இடம் பெற்றால் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த திட்டம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.சிறீபதி தெரிவிக்கையில், நிலையான அபிவிருத்தி இலக்கினை நோக்கிய பயணத்தில் சர்வதேச கடல்சார் அமைப்பு(IMO) ஊடான வழிகாட்டலில் உலகளாவிய ரீதியில் 20230ல் குறித்த வேலை திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் வர்த்தக ரீதியான அநேகமாக கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகின்றன. இதன் மூலம் வளிமாசடைவு ஏற்படுகிறது. தற்போது நூற்றுக்கு 70 வீதமான கப்பல் போக்குவரத்து மூலமாக நைட்றிக் ஒக்சைட் அளவு அதிகரித்து வளி மாசடைகிறது. கப்பல் போக்குவரத்து மூலமாக வளிமாசடைவதை 2030ல் குறைக்க வேண்டும் என்பதற்காக திருகோணமலை துறைமுகத்தை மையமாக வைத்து இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Green port திட்டத்தை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் வளிமாசடைவதை குறைக்கும் நோக்கில் குறித்த பசுமை எரிபொருள் மையத்தில் மூலப்பொருள்களை கொண்டு உற்பத்தியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பலுக்கு பாவிக்கப்படும் ஒயிலானது அப்லக் ஆகும். வாகனங்களுக்கு பாவிக்கப்பயன்படும் டீசல், பெற்றோல் மாதிரியானது அல்ல இதனால் விசேடமாக ஹைட்ரஜன், ஒட்சிசன் போன்ற எரிசக்தி இங்கு உருவாக்கப்பட்டு எரிவாயு போன்ற வடிவில் சேமித்து கப்பலுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆனால் இத் திட்டத்துக்காக ஆரம்ப சுற்றுச் சூழல் ஆய்வு மற்றும் விரிவான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அவசியம் காணப்படுகிறது இதனை துறைசார் நிபுணர்களை கொண்டு மேற்கொள்ளப்படும். இதன்போது கடல்சார் சூழல் தாக்கங்கள் பாதகமாக ஏற்படும் என இணங்கண்டால் அதனை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு மற்றும் மதிப்பீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாதகமான வகையில் மதிப்பீடுகள் இடம் பெறவாய்ப்புக்கள் காணப்படும் என்றும் மேலும் தெரிவித்த அவர் திருகோணமலை துறை முகபகுதி ஏன் தெரிவு செய்யப்பட்டது பற்றியும் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை துறை முகம் இயற்கையானதும் மேலதிக அபிவிருத்திகளை செய்யக்கூடிய இடவசதிகளையும் கொண்டதாக காணப்படுகிறது. இது ஒரு பரீட்சார்த்தமாக இடம்பெற்று நீண்ட கால உற்பத்தியை கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார். ஆனாலும் சமூக, பொருளாதார,சூழல் பாதிப்புக்கள் அற்ற நிலையில் கப்பல் போக்குவரத்து சேவை மூலமாக ஏற்படும் வளிமாசடைவதை குறைக்க பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் மையம் இடம் பெறவுள்ளமை அபிவிருத்தியின் பக்கம் நல்லதாகவும் மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்ச நிலையும் இங்கு காணப்படுவதை எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.