தனியார் பேருந்துடன் கார் மோதி விபத்து - பெண் ஒருவர் வைத்தியசாலையில்..
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பேருந்துடன் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(23.11.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம மயானத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் வைத்தியசாலையில்..
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, குடாகம பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதன்போது, காரின் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு பேருந்தில் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

