தமிழர் பகுதிகளில் மூன்றாவது நாளாகத் தொடரும் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று(23.11.2026) யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமான முறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை
தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டுப் பருத்தித்துறை நகரில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் விசேட பந்தல் அமைக்கப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று(23.11.2026) மாலை 6.00 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயார் மாவீரர் நினைவுப் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன், நகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்