PSTA சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுங்கள்! புதிய சட்டமூலத்துக்கு எதிராகப் போர்க்கொடி
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்த முடியாததுடன், அதனை உடனடியாக மீளப்பெற வேண்டும் என சிவில் சமூக அமைப்பான ‘ஜஸ்டிஸ் போர் ஆல்’ (Justice for All) வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இன்று (23) பங்கேற்ற பின்னர் வெளியிட்ட அறிக்கையிலேயே அந்த அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
பல கடுமையான சரத்துக்கள்
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்திலும், அதனை அறிமுகப்படுத்திய நடைமுறையிலும் பல்வேறு பாரதூரமான குறைபாடுகள் காணப்படுவதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கடுமையான சரத்துக்கள், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைவிடவும் அதிக ஒடுக்குமுறையை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாகவே புதிய PSTA சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ள போதிலும், இந்தப் புதிய சட்டமூலமும் நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அண்மையில் முன்மொழியப்பட்ட PSTA சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் சவால் விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புதிய சட்டமூலம்
இதேவேளை, புதிய சட்டமூலம் தொடர்பில் கலந்தாலோசனைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
PSTA மற்றும் மற்றுமொரு முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பில் கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்த நிலையில், அவருடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி கடந்த நவம்பர் 9ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும், அதற்குப் பதில் கிடைக்காத நிலையில், கடந்த நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் கடிதம் அனுப்பி தனது கோரிக்கையை வலியுறுத்தியதாகவும், இதுவரை ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பான தனது கரிசனைகளையும் எதிர்ப்புகளையும் முன்வைத்ததாக ‘ஜஸ்டிஸ் போர் ஆல்’ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.