கொழும்பு கடற்கரையில் எண்ணெய் கசிவு! ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை
கொழும்பு துறைமுகத்தில் உள்ள சேமிப்புத் தொட்டி ஒன்றில் இருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக, கொழும்பு மோதரை பகுதிக்கு அருகில் உள்ள மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி கடுமையாக மாசடைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பான கரிசனையை வெளியிட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி, சுமார் 1,000 டன் கொள்ளளவு கொண்ட, JCT எண்ணெய்த் தொட்டி 108 இல் இருந்து இவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவு
இதன்போது, குறித்த எண்ணெய்த் தொட்டி முழுமையாக நிரம்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மெரைன் எரிவாயு எண்ணெய் என்ற வகையே இதன்போது கசிந்துள்ளதாகவும், சேதமடைந்த வால்வு ஊடாக இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கசிந்த எண்ணெய், நகர கால்வாய்க்குள் கலந்து, மோதரை கடற்கரையில் உள்ள ஒரு வெளிப்பகுதி வழியாக கடலில் கலந்துள்ளது.
இதன்போது, 3 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று ஓரிரு மணித்தியாலத்திற்குள் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு முன்பே பெருமளவான எண்ணெய் வடிகால் அமைப்பின் ஊடாக கசிந்து கடலைச் சென்றடைந்துள்ளது.