காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் : ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் பலி
காஸாவில் ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான நயீம் அபு நஹேல், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
காஸாவின் ஹமாஸ் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மேற்கு காஸா நகரில் விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
50 வயதான அபு நஹேல், கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்தப் பதவியை வகித்து வந்தார்.
அவரது முன்னைய அதிகாரி, இஸ்ரேலிய சிறப்புப் படையினரின் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் கட்டமைப்பை இலக்கு வைத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், அபு நஹேல் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று செவ்வாய்க்கிழமை காஸாவின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மீட்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கட்டமைப்பை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினமும் தொடர்கின்றன.
அந்தப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை காஸாவில் குறைந்தது 1,679 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நிர்வாகத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
இந்தப் புள்ளிவிபரங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் நம்பகமானவையாகக் கருதப்படுகின்றன.
இதே காலப்பகுதியில் காஸாவில் ஆறு இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான குழுக்கள் நடத்திய தாக்குதலே காஸா போர் ஆரம்பமாவதற்குக் காரணமாக அமைந்தது.
அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 74,740க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.