உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் இரட்டைச் சதம்
இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டைச் சதம் அடித்து புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆசியக் கிண்ண Rising Stars தொடரின் குழுநிலைப் போட்டியில் இந்தியா ஏ அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையிலான போட்டி கட்டாரின் டோஹாவில் நடைபெற்றது.
அதிவேக இரட்டைச் சதம்
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி நிர்ணயித்த 250 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்தியா ஏ அணிக்காகக் களமிறங்கிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, எதிரணிப் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார்.
வெறும் 28 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்த அவர், இதன் மூலம் ஜேக் பிரேசர் மெக்குர்க் படைத்திருந்த அதிவேக லிஸ்ட் ஏ சதத்திற்கான சாதனையை முறியடித்தார்.

இதனையடுத்து, அடுத்த 24 பந்துகளில் மேலும் 100 ஓட்டங்களைக் குவித்த அவர், வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து மற்றுமொரு உலக சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன்னர், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த சாதனை 103 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்ற சாட் போவ்ஸின் வசம் இருந்தது.
இந்தச் சாதனை
அத்துடன், இந்த அதிரடி இன்னிங்ஸில் 28 சிக்ஸர்களையும் விளாசிய வைபவ், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.
இதற்கு முன்னர் 23 சிக்ஸர்கள் அடித்த டி'ஆர்சி ஷோர்ட் இந்தச் சாதனையைத் தக்கவைத்திருந்தார். இந்தப் போட்டியில் அவர் படைத்த சாதனைகள் இதோடு முடிந்துவிடவில்லை.

இதற்கு முன்னர் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைச் சதத்தைப் பெற்றிருந்த அவர், தற்போது அதிவேக சதம், அதிவேக 150 ஓட்டங்கள் மற்றும் அதிவேக இரட்டைச் சதம் ஆகிய சாதனைகளையும் ஒரே போட்டியில் முறியடித்துள்ளார்.
குறிப்பாக, 40 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்ததன் மூலம், கடந்த ஆண்டு பீஹார் அணிக்காக விளையாடியபோது 59 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்த தனது சொந்தச் சாதனையையும் முறியடித்துள்ளார்.
வைபவின் ஆட்டம்
இவரது அதிரடியின் உதவியுடன் இந்தியா ஏ அணி வெறும் 14.2 ஓவர்களில் 250 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதில் இந்தியா ஏ அணியின் தலைவர் திலக் வர்மா கருத்துத் தெரிவிக்கையில், வைபவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. முதல் ஐந்து ஓவர்களிலேயே போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

ஐந்து ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்த விதம் வியப்புக்குரியது.
அவர் தொடர்ச்சியாக சிக்ஸர்களை விளாசியதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
இது உண்மையிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று எனத் தெரிவித்தார். வெறும் 15 வயதில் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.