ரவிராஜ் படுகொலை வழக்கில் தப்பி ஓடிய கருணா குழு - சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா
பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்தபோது, அவருடைய கைக்கூலியொருவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடராஜா ரவிராஜ் 2006 நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால், அந்த வழக்கில் சுமார் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது, நடுவர் குழு முன்னிலையில் குறித்த வழக்கு இடம்பெற வேண்டும் என எதிர்த் தரப்பினரால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் இடைவேளை எடுத்த பின்னர், நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி அதற்கான அனுமதியை வழங்கினார்.

அப்போதே நான் மாவை சேனாதிராஜாவைத் தொடர்புகொண்டு, வழக்கு திசைதிரும்பியுள்ளது. நடுவர் குழு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், எமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என எச்சரித்தேன்.
தற்போது தமிழ்த் தேசியத்திற்காக நான் இருக்கின்றேன் எனக் கூறும், பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணியொருவரால் வழக்கு தோல்வியில் முடிந்தது.
இதுபோன்று பல தமிழ் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை வழக்குகள் நிலுவையில் இருக்கும் அதேவேளை, அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை என்றார்.
இவ்வாறான அரசியல் சதிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் வழக்குகளின் தற்போதைய நிலையை உங்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கின்றது 'ஊடறுப்பு' நிகழ்ச்சி,