விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி! இலங்கையருக்கு பிணை வழங்கிய கேரள நீதிமன்றம்
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான அஸ்மின் என்பவருக்கு கேரள மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்காக போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மூலம் உதவியதாக அவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றஞ்சாட்டியிருந்தது.
எனினும், குறித்த நபருக்கு சிறப்பு NIA நீதிமன்றம் மன்னிப்பு வழங்கி, வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதையும், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையும் கருத்திற்கொண்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கான உரிமை
மேலும், அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளாக பின்வருவன கூறப்பட்டுள்ளன,
- இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.
- எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு நீதிமன்ற அனுமதியின்றி வெளியேறக்கூடாது.
- ஒவ்வொரு சனிக்கிழமையும் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை NIA அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும்.
- வழக்கின் ஏனைய சந்தேகநபர்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது.
- ஊடகங்களுடன் பேசவோ, வழக்கு தொடர்பில் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கவோ கூடாது.
முக்கியமாக, பிணை வழங்கப்பட்டமை அவருக்கு இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கான உரிமையை வழங்காது என்றும், குடிவரவு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.