கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் சிங்களம் மற்றும் தமிழில் அறிமுகம்
கிரிக்கெட்டின் விதிமுறைகள் சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக, கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு மேல்முறையீடு, ஆட்டமிழப்பு, எல்லைக்கோடு மற்றும் நடுவரின் தீர்மானம் ஆகியவற்றை நிர்வகிக்கும் விதிமுறைகள், பல இலங்கையர்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாத ஆங்கில மொழியிலேயே இருந்து வந்த நிலைமை நேற்று (23) முதல் மாற்றமடைந்துள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் (Sri Lanka Cricket), மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உத்தியோகபூர்வ கிரிக்கெட் சட்டவிதிகளின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது.
விதிமுறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள், நடுவர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இளம் ரசிகர்கள் தங்களது தாய்மொழியில் கிரிக்கெட் விதிமுறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நடுவர் அபிவிருத்திப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் லிண்டன் ஹன்னிபால், இந்த முயற்சி கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டார்.
"இன்று வரை, மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினால் பராமரிக்கப்படும் கிரிக்கெட் சட்டவிதிகள் எமது மக்களுக்கு முழுமையாக ஆங்கில மொழியிலேயே கிடைத்து வந்தன. இன்று நாம் அந்த நிலைமையை மாற்றியுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) கோரிக்கைக்கு அமைவாக, MCC இணையத்தளத்தில் வெளியிடுவதற்காக கிரிக்கெட் சட்டவிதிகளை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக ஹன்னிபால் விளக்கினார்.
MCC அமைப்பின் ஊக்குவிப்பும் அனுமதியும் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழ் மொழிபெயர்ப்பும் தயாரிக்கப்பட்டது. இரு மொழிபெயர்ப்புகளும் மூல ஆங்கிலப் பிரதியுடன் மிகுந்த கவனத்துடன் ஒப்பிட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
திட்டத்தின் முக்கியத்துவம்
ஒவ்வொரு சட்டவிதியின் அர்த்தமும் மொழி வேறுபாடின்றி ஒரே மாதிரியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் முக்கியத்துவம் மொழிபெயர்ப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் மாற்றத்திற்கான குழுவின் உறுப்பினர் சிதத் வெத்தமுனி கருத்துத் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் விதிமுறைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கிடைப்பதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் போட்டி நடுவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தடைகளில் ஒன்று நீக்கப்படும் என்றார்.
"நடுவர் பணியும் போட்டி ஒழுங்குமுறைகளும் கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இது எமது கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை என நான் கருதுகிறேன்" என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, பிரதான நகர்ப்புறங்களுக்கு அப்பால் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் பணியாற்றும் நடுவர்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னம்பிக்கையை மொழித் தடைகள் சில சந்தர்ப்பங்களில் பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"சட்டவிதிகள் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது எமது நடுவர்களும் அதிகாரிகளும் தங்களது கடமைகளை அதிக நம்பிக்கையுடன் நிறைவேற்ற உதவும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டின் பாதுகாவலர்களாகக் கருதப்படும் MCC அமைப்பு, கிரிக்கெட் சட்டவிதிகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பது இதுவே முதல் தடவை என்றும் வெத்தமுனி குறிப்பிட்டார்.
சிக்கலான கிரிக்கெட் சட்டவிதிகள்
MCC அமைப்பின் கிரிக்கெட் பிரிவுத் தலைவர் ஃப்ரேசர் ஸ்டீவர்ட் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்குக் கூட கிரிக்கெட் சட்டவிதிகளைப் புரிந்துகொள்வது சவாலானது எனக் குறிப்பிட்டார்.
"கிரிக்கெட் சட்டவிதிகள் சிக்கலானவை. விளையாட்டும் சிக்கலானது. நீங்கள் முழுமையாகப் பேசத் தெரியாத ஒரு மொழியில் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அது மேலும் கடினமாகிறது" என அவர் தெரிவித்தார்.
மொழிபெயர்க்கப்பட்ட கிரிக்கெட் சட்டவிதிகள் தற்போது Apple மற்றும் Android சாதனங்களில் கிடைக்கும் MCC Laws of Cricket செயலி மூலம் அணுகக்கூடியதாக உள்ளன.
இந்தச் செயலி அண்மையில் ஹிந்தி, உருது, பங்களா, கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டீவர்ட் தெரிவித்தார்.
"உலகக் கிரிக்கெட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு மிகவும் முக்கியமான இரண்டு மொழிகளை இந்தச் செயலியில் இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என அவர் கூறினார்.
அடுத்த தலைமுறை வீரர்களுக்கும், குறிப்பாகத் தங்களது தாய்மொழியில் விளையாட்டைக் கற்றுக்கொள்ள விரும்பும் சிறுவர்களுக்கும் இந்த மொழிபெயர்ப்புகள் பெரும் பயனளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"சிறுவர்கள் தங்களது சொந்த மொழியில் விளையாட்டைப் புரிந்துகொள்ள முடிந்தால், அது மிகவும் முக்கியமானதாகும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு விளையாட்டை முறையாக விளக்கி வளர்க்கத் தவறினால், எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையக்கூடும்" என அவர் தெரிவித்தார்.
விரிவான திட்டத்தின் முதல் கட்டம்
மேலும், தற்போதைய செயலியின் பதிப்பு ஒரு விரிவான திட்டத்தின் முதல் கட்டம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் ஊடாடும் கற்றல் அம்சங்கள் மற்றும் மேலதிக கல்வி உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியை உலகக் கிரிக்கெட்டின் கூட்டுப் பொறுப்பாக வர்ணித்த ஸ்டீவர்ட், கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்த தேசிய கிரிக்கெட் நிறுவனங்கள், நிர்வாக அமைப்புகள் மற்றும் MCC ஆகிய அனைத்துக்கும் பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
"நாம் அனைவரும் இந்த விளையாட்டின் பங்குதாரர்கள். கிரிக்கெட் செழிக்கவும், முன்னேறவும், அடுத்த தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்படவும் நாம் அனைவரும் விரும்புகிறோம். கிரிக்கெட்டின் நன்மைக்காக இது ஒரு கூட்டு முயற்சியாகும்" என அவர் கூறினார்.
பல மொழிகளில் கிரிக்கெட் பேசப்பட்டாலும், ஒரே ஆர்வத்துடன் விளையாடப்படும் இலங்கையில், இந்த அறிமுகம் ஒரு மொழிபெயர்ப்புத் திட்டத்தை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி அல்லது மட்டக்களப்பு என நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான மொழியில் கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தியுள்ளது.