அனுபவம் இல்லாதவர்களே ஆட்சியில்..! மொட்டுக் கட்சி கடும் விமர்சனம்
நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று(23.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபோதிலும், நாட்டை நிர்வகிக்கத் தெரியாதவர்களே பதவிகளில் உள்ளனர்.
18 பில்லியனுக்கும் அதிகமான நட்டம்
பல ஆண்டுகளாகச் சேர்க்க முடியாத பணத்தை இப்போது அவசரமாகச் சேகரிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.

வாழ்க்கைச் செலவால் சாதாரண மக்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதரவளித்த தொழிற்சங்கங்களும் இப்போது எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. அவற்றிற்கு எமது கட்சி முழுமையாக ஆதரவளிக்கும்.
மேலும், ஜனநாயகத்தை அழித்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸைத் தமது கட்டுப்பாட்டுக்குள் அரசு கொண்டு வந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நான்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏழு, மேல் நீதிமன்றத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு முடிந்து பல மாதங்களாகியும் அவற்றை நிரப்பாமல் இருப்பது, நீதிபதிகளின் பதவி உயர்வுகளைத் தடுத்துத் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுகின்றது.
நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 பில்லியனுக்கும் அதிகமான நிலக்கரி நட்டம், 323 கொள்கலன்கள் விடுவிப்பு, கடவுச்சீட்டு விவகாரம், அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் நகர மேயர்கள் மீதான இலஞ்சப் புகார்கள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.