ஜனாதிபதி தலையிட்டு நினைவேந்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. சீலரத்ன தேரர் அரசிடம் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் திலீபனின் உருவச்சிலையை வைத்துப் பாரியளவில் நினைவேந்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை சிங்கள மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நேற்று(27.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலையிட்டு உடனடி நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கக் கூடாது. தற்போது திலீபனின் உருவப்படத்தையும் உருவச்சிலையையும் வைத்து யாழ்ப்பாணத்தில் பாரியளவில் நினைவேந்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் அவரை நினைவுகூரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், தற்போதைய அரசு எங்கே இருந்தது? அரசின் தலைவர்கள் இவற்றைப் பார்க்கவில்லையா? திலீபன் ஒரு பயங்கரவாதி. அவர் ஒருபோதும் அப்பாவியானவர் அல்லர்.
இதேபோன்று, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் திலீபனையும் நினைவுகூரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர் அமைப்புகளுக்குத் தேவையான வகையிலேயே முன்னெடுக்கப்படுவதாக நாம் பார்க்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் புலம்பெயர் அமைப்புகள் இலங்கை முழுவதையும் தமது நடவடிக்கைகளால் சூழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது.
கை - கால்களை இழந்த இராணுவத்தினர்
திலீபனை நினைவுகூரும்போது எமது நாட்டின் சிங்கள மக்களுக்கு மிகுந்த வேதனை ஏற்படுகின்றது. அப்பாவிகளான ஏழைத் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் பிள்ளைகள்தான் போருக்குச் சென்றனர். அந்தப் போரின் போது பல இராணுவத்தினர் தமது கைகளையும் கால்களையும் இழந்தனர்.
சிலர் கண்களை இழந்து பார்வையற்றவர்களாகினர். மேலும் சிலர் செவித்திறனையும் இழந்தனர். அந்த மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எவ்வளவு வேதனை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூன்று தசாப்த காலப் போரை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

அவ்வாறிருக்கையில், தற்போது புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தவர்களை நினைவுகூருகின்றனர் என்று கூறும்போது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் ஏற்படும் வேதனையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாடு சிங்கள மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் மாத்திரம் உரித்தானது என்று நான் கூறவில்லை. இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என அனைவரும் வாழ வேண்டும். ஆனால், அனைவரும் ஒரே நாட்டில், ஒரே சட்டத்தின் கீழ் வாழ வேண்டும்.
ஒருவருக்கு ஒரு சட்டமும் மற்றொருவருக்கு வேறு சட்டமும் இருக்கக்கூடாது. எனவே, இவ்வாறான விடயங்கள் இடம்பெறும் போது ஜனாதிபதி தலையிட்டு, அவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.