IMF அங்கீகாரம் கிடைக்குமா! டிசம்பர் 2ஆம் திகதி IMF எடுக்கப்போகும் முக்கிய முடிவு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) ஏழாவது மீளாய்வு மற்றும் நான்காவது சரத்து ஆலோசனை தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி அதன் பணிப்பாளர் சபை பரிசீலனை செய்யவுள்ளது.
இது தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
IMF திட்டம்
எனினும், பணிப்பாளர் சபையின் இறுதி அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.
சபையின் அங்கீகாரம் கிடைத்தால், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான IMF திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்குப் பின்னர் இலங்கைக்கான புதிய நிதி ஏற்பாடு தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை
இதேவேளை, இலங்கை 2027ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளதுடன், 2028ஆம் ஆண்டில் இந்தத் தொகை சுமார் 3.6 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளை முகாமைத்துவம் செய்வதற்கும், பொருளாதார மீட்சியைத் தொடர்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பு முக்கியமானது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் தீர்மானத்தைப் பொறுத்தே இலங்கைக்கு அடுத்தகட்டமாக சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பது உறுதியாகும்.