மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோஹினி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு
இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடையே கவலை ஏற்பட்டிருந்தது.
மோஹினி எல்ல அமைந்துள்ள பகுதி, வளைவுகள் மற்றும் ஆபத்தான நில அமைப்பைக் கொண்டுள்ளதால், வாகனங்கள் வீதியை விட்டு விலகும் சந்தர்ப்பங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆபத்தான இடத்தில் பாரிய பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் நாட்டப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞை
அத்துடன், வாகன சாரதிகள் அவதானமாக பயணிப்பதற்காக தேவையான வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம், வாகனங்கள் வீதியை விட்டு விலகி ஆபத்தான பகுதிக்குள் செல்வதைத் தடுப்பதுடன், குறித்த பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

