இலங்கை அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கண்டனம்
திருகோணமலை (Trincomalee) - சம்பூரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அரசாங்கத்தின் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
"தற்போது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வாரத்தை கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி, நினைவு கூருகிறார்கள்.
பொலிஸாரின் நடவடிக்கை
இது தமது இழந்த உறவுகளை நினைவு கூரும் செயல் மட்டுமல்ல, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கடந்து வந்த பேரவலத்தை, இவற்றின் மத்தியிலும் உயிர் பிழைத்த அதிசயத்தை மீட்டுப் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது.
இந்நிலையில், அண்மையில் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக 40 வயதான கமலேஸ்வரன் விஜிதா, 40 வயதான செல்வவினோத்குமார், 43 வயதான சுஜானி நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா ஆகியோரை தென்னிலங்கை பொலிஸார் இரவு வீடு புகுந்து துன்புறுத்தி கைது செய்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை பொலிஸாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும், இது தொடர்பில் பெண்கள் அமைப்புக்கள் தமது கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.
அதேவேளை, பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை சர்வதேச நாட்டுத் தூதுவர்கள் உணர்ந்து இலங்கைக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |