முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஐந்தாவது நாள் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்
2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலையில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஐந்தாவது நாளாக இன்று (16.05.2024) பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
மன்னார்
அந்தவகையில், வன்னி (Vanni) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார் (Mannar) - நானாட்டான் பேருந்து நிலைய பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது, கடும் மழைக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.
நினைவேந்தல் ஊர்தி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் (16) மன்னாரை வந்தடைந்தது.
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
செய்தி : ஆசிக், ராயூகரன்
யாழ்ப்பாணம்
அதேவேளை, யாழ். (Jaffna) பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் இன்று (16) கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் உணவு தேவையுடன் வாழ்ந்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டு உயிர் காக்கப்பட்டமையை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
செய்தி : காண்டீபன்
முல்லைத்தீவு
மேலும், முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்று (16) காலை வழங்கப்பட்டது.
இதன்போது, குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தது.
கொக்குத்தொடுவாய்
முள்ளிவாய்க்கால் வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், தமிழின படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாளான இன்றையதினம் (16) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.
செய்தி : சதீஸ், காண்டீபன், பவன், தவசீலன்
அதேவேளை, முல்லைத்தீவு - கள்ளப்பாடு தீர்த்தகரை பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதன்போது, பாதிரியார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றைய தினம் (16) வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா
மேலும், முள்ளிவாய்கால் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya) - இலுப்பையடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இலுப்பையடியிலுள்ள ஆறுமுகநாவலர் சிலையடிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் (16) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
செய்தி : ஹஸ்பர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |