மின்வெட்டு தொடர்பில் சஜித் சபையில் விடுத்த எச்சரிக்கை
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை (மின்வெட்டு) நோக்கித் தள்ளப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபையில் உரையாற்றிய அவர், நுரைச்சோலை மின் நிலையத்தின் உற்பத்தி வீழ்ச்சி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தரவுகளைப் பகிரங்கப்படுத்தினார்.
நுரைச்சோலையில் சரிந்த மின் உற்பத்தி
கடந்த நான்கு நாள்களில் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி பின்வருமாறு வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் 13: 130 மெகாவோட் குறைவு
மார்ச் 14: 135 மெகாவோட் குறைவு
மார்ச் 15: 132 மெகாவோட் குறைவு
மார்ச் 16: 148 மெகாவோட் குறைவு
நுரைச்சோலையில் ஏற்படும் இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், அதற்கு மாற்றீடாக டீசல் மூலம் இயங்கும் மின் நிலையங்களை நாட வேண்டியுள்ளது.

எனினும், தற்போது நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, டீசல் மின் நிலையங்களை முழுமையாக இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை இதே வேகத்தில் தொடருமாயின், எதிர்வரும் ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் திட்டமிட்ட மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
"இது ஒரு சாதாரண எச்சரிக்கை அல்ல, தரவுகளுடன் கூடிய அபாயம். இந்த ஆபத்தான நிலையைத் தவிர்க்க அரசு உடனடியாகத் தீர்வைக் காண வேண்டும்" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.