புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்தல்
பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பந்தாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மின்சாரத் தீர்வை விகிதத்தைக் கணக்கிடும்போது மூலதனச் செலவினங்களில் பாரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் பெறும் நிலையில், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களும் முயற்சியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
சூரிய பலகைகள் மற்றும் பேட்டரி சேமிப்பு உபகரணங்களில் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமான சூழல் காணப்பட்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமைகின்றது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியுள்ள நிலையில், பெரிய நிறுவனங்களுக்குப் பசுமை நிதிகளுக்கான எளிதான அணுகல் கிடைப்பதையும், நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தி அவை சாதகமான பலன்களைப் பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
அதிகப்படியான எரிசக்தி உற்பத்தி இல்லாத பகுதிகளில் பேட்டரி முறைமைகள் நிறுவப்படாமல், தேவை உள்ள பகுதிகளில் சமூக பேட்டரி முறைமைகள் மற்றும் மெய்நிகர் மின் நிலையக் கருத்துருவைக் கொண்டு விநியோக துணை நிலையம் மட்டத்தில் அவற்றை இணைக்க வேண்டும்.
சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி
முறையற்ற விலை நிர்ணயம் மற்றும் கட்டணக் கொள்கைகளால் சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரடியாக 1 இலட்சம் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களின் எண்ணிக்கை 1,150 இல் இருந்து 560 ஆகக் குறைந்து, மறைமுகமாக 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தடைகளை ஏற்படுத்தி, எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது.
எந்த அரசியல் கொள்கை சார்ந்தவராகவும் இருந்தாலும், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான முதலீட்டாளர் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.



