இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..
இலங்கையில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சட்டப் போராட்டங்கள் குறித்து மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஐந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகவும் குறித்த வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, திருகோணமலையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கொழும்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலும் இவ்வாறான முகாம்கள் இயங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் மற்றும் உயர் அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக நீதியை நிலைநாட்டுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டது.
பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தானும் அவரது துணைவியார் கௌரிசங்கரி ஆகியோர் இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டுவதற்காக நீண்டகாலமாகப் போராடி வந்தோம்.
மேலும், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உள்ளிட்ட அமைப்புகள் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களைத் திரட்டி, சித்திரவதை குற்றச்சாட்டுகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளன.
மேலும், கோட்டாபய ராஜபக்சவின் அரசு நீதிமன்றக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கவும் முனைந்தது.
2008-2009 காலப்பகுதியில் இடம்பெற்ற 11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமல் போனது தொடர்பான வழக்குகளை முடக்குவதற்கு, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் பல்வேறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில், 2025 செப்டெம்பர் மாதம் இலங்கை உயர்நீதிமன்றம் வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், குறித்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் சட்ட நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..