புனித நகரங்களைச் சூழ்ந்த பதற்றம்! மக்கா - மதீனாவில் ஏவுகணைச் சிதறல்கள்..
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட சனிக்கிழமையன்று, ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததாக சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள்
ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளின் சிதறல்கள் மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா பகுதிகளை நோக்கி வந்ததாக சவுதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மக்காவுக்கு வெளியே உள்ள வாடி முகம்மாஸ், ஜெத்தாவின் அல்-நுஸ்ஹா பகுதி, தாயிஃபில் உள்ள வாடி ஜலீல் மற்றும் ராபிக் பகுதியில் மக்கள் வசிக்காத இடம் ஆகிய பகுதிகளில் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக, மக்கா உள்ளிட்ட மேற்கு மாகாணங்களின் நான்கு பகுதிகளில் ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரித்த சவுதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அப்பகுதி மக்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சவுதி அரேபியாவின் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நிலைமை
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், தம்மாம் மற்றும் நஜ்ரான் பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், கமிஸ் முஷைத் விமானப்படைத் தளம், எண்ணெய் வசதிகள் மற்றும் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாய் ஆகியவை இலக்குகளாக இருந்ததாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தின் தகவலின்படி, தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள கடலோரக் காவல் படை வசதிகளைக் குறிவைத்து ஹூதிகள் மூன்று ஏவுகணைகளை ஏவியுள்ளனர்.

இந்த மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி தலைமையிலான கூட்டணி மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான எல்லை தாண்டிய தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய பங்கு வகித்திருந்தது.
தற்போது பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளது.
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..