மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஹர்ஷ டி சில்வா
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
தான் முகம் கொடுத்த அவசர ஆபத்தான சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட 1969 என்ற வீதி அவசர உதவிக்குழுவினரின் சிறப்பான சேவையை பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்து
கடந்த 20ஆம் திகதி மாலை தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரமான அனுபவத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற அளவில் அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் பின் சக்கரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் நூலிழையில் தப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நேரத்தில் 1969 என்ற உடனடி அழைப்பு இலக்கம் ஊடாக விடுக்கப்பட்ட ஒரே ஒரு அறிவித்தலை அடுத்து, சில நிமிடங்களுக்குள் குறித்த இடத்திற்கு வந்த உதவிக்குழுவினர் சம்பந்தப்பட்ட சிக்கலை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாரதிகளிடம் கோரிக்கை
அக்குழுவினரின் தொழில்சார் நிபுணத்துவத்தையும் கனிவான சேவையையும் பாராட்டுக்குரியது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சக்கரத்தை மாற்றுவது அவர்களின் உத்தியோகபூர்வ பொறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்த போதிலும், அதற்கு இடமளிக்காது அக்காரியத்தையும் அவர்களே செய்து முடித்ததாக பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு முன்னர் தமது வாகனங்களின் சக்கரங்களின் நிலை குறித்து முற்கூட்டியே பரிசோதனையில் ஈடுபடுமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.