மனிதப் புதைகுழிகளில் மீட்கப்படும் என்புகள்: அறிவியல் அடையாளம் அவசியம்..! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தல்
மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கோரிக்கை
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
இலங்கையின் நீண்டகால ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அல்லது அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வது இனியும் தாமதிக்க முடியாத அவசரக் கடமையாகும்.
கிடைக்கப் பெறும் ஆவணங்கள், சர்வதேச அமைப்புகளின் பதிவுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) தரவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, போரின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,000க்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிடுவது நீதிக்கான தேடலின் அத்தியாவசியமான முதல் படியாகும்.
இந்தச் செயல்முறை, இக்குற்றங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும், நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், உறவினர்கள் தங்கள் இறுதி மரியாதையைக் கண்ணியமான முறையில் செலுத்துவதற்கும் முதல் படியாக அமையும்.
விவரங்களை சரிப்பார்க்க தளவுத்தளம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட திகதிகள், சரணடைந்த இடங்கள், கடைசியாகக் காணப்பட்ட இடங்கள் மற்றும் இரத்த உறவினர்களின் தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, சரிபார்க்கக் கூடிய தரவுத்தளமாக உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
மனித என்புகளை அடையாளம் காண்பதில் இனியும் தாமதம் கூடாது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் வாய்ப்பை வழங்கக் கூடிய முக்கியமான தடயவியல் ஆதாரங்களாகும்.
ஒவ்வொரு மனித என்புகளையும் அறிவியல் ரீதியாக அடையாளம் காண்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியல் இரத்த உறவினர்களிடமிருந்து பெறப்படும் DNA மாதிரிகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும் மனித என்புகளில் இருந்து பெறப்படும் DNA மாதிரிகள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடயவியல் நடைமுறைகள் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இறுதி மரியாதைக்காக கொடுக்கப்பட வேண்டிய மனித எச்சங்கள்
ஒரு மனித எச்சம் அடையாளம் காணப்படுவது வெறும் அறிவியல் செயல்முறை அல்ல. அது ஒரு குடும்பத்திற்கு பல தசாப்தங்களாக மறுக்கப்பட்ட உண்மையை வழங்கும் நீதிச் செயல்முறையாகும்.
அடையாளம் காணப்பட்டவர்களின் உடல் எச்சங்களை அவர்களின் குடும்பங்களிடம் கண்ணியத்துடன் ஒப்படைத்து, அவர்கள் விரும்பும் மத மற்றும் கலாசார மரபுகளின்படி இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
கிடைக்கப்பெறும் ஆவணங்கள் என்ன கூறுகின்றன
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC)
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பதிவுகளின்படி, 2011 டிசம்பர் 31 நிலவரப்படி இலங்கையில் 15,780 பேரைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் பெரும்பான்மையினர் ஆண்கள் என்றும், 1,494 குழந்தைகள் மற்றும் 754 பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கியிருந்ததாக அந்தக் காலகட்டத்தின் ICRC தரவுகள் குறிப்பிடுகின்றன.
136 நபர்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், ஐ.சி.ஆர்.சி (ICRC) அமைப்பு முந்தைய ஆண்டில் 17,741 சிறைக் கைதிகளைச் சென்று பார்வையிட்டிருந்தது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (AHRC)
2012 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் 15,780 காணாமல் போனோர் தொடர்பான எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்குகின்றன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (AI)
இலங்கை, உலகில் அதிகளவிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளில் ஒன்றாகும். 1980களின் பிற்பகுதியிலிருந்து 60,000 முதல் 100,000 வரையிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையைக் கருத்திற் கொண்டு, இலங்கையில் நீதி மறுக்கப்பட்டதற்கான சான்றுகளுக்குப் பஞ்சமில்லை என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுக்கள்
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுக்களுக்கு 18,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக 2014ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP)
இலங்கையில் 17,000 காணாமல் போனோர் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறிலங்கா - விடுதலை புலிகள் (LTTE) போருடன் தொடர்புடையவை.
இலங்கை காணாமல்போன ஆட்களைப் பற்றிய அலுவலகம் (OMP)
எங்களது தரவுத் தளத்தில் 23,352 வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன" என்று ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தலைவரான மகேஷ் கட்டுலந்த கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
இரட்டிப்பாகப் பதிவானவை மற்றும் போரில் காணாமல் போன இராணுவத்தினரின் (missing in action) கோப்புகளை நீக்கிய பின்னர், தற்போது 16,966 காணாமல் போனோர் வழக்குகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, 1,00,000க்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி வாங்கிய போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுமார் 20,000 பேர் காணாமல் போயுள்ளதாகக் கருதப்படுகின்றது.
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
நம்பகமான ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், போரின் இறுதிக் கட்டத்தில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 18,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களிற்கு என்ன நடந்ததது என்பதைத் தெளிவுபடுத்துமாறும் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
சர்வதேச சமூகத்திற்கான உடனடி கோரிக்கைகள்
01. முழுமையான பெயர்ப் பட்டியலை வெளியிடுதல்: சிறிலங்கா அரசும் ஏனைய பங்குதாரர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல், காணாமல் ஆக்கப்பட்ட திகதிகள் மற்றும் இரத்த உறவினர்களை தொடர்பு கொள்ளும் விபரங்கள் அடங்கிய விரிவான பட்டியலை வெளியிடுவதற்கு சர்வதேச சமூகம் அவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
02. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்: பாதிக்கப்பட்ட அனைவரினதும் மேற்குறித்த விபரங்கள் 1) ஒரே விரிவான *பொது தரவுத்தளத்தில் (centralised database) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும், 2) தம்மிடம் கைவசம் உள்ள பட்டியல்களை ஐ.நா (UN) நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்பகமான முழுமையான பெயர் பட்டியலை விரைவாக வெளிக் கொண்டு வருவதற்கு அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

03. சர்வதேச டி.என்.ஏ தரவு வங்கி - பொது தரவுத்தளம் (centralised database): செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 583 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பிற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை, டி.என்.ஏ தரவு வங்கியைக் கொண்டு விரைவாக அடையாளம் காண மேற்படி பொது தரவுத்தளம் (centralised database) வழிவகுக்கும்.
இந்தப் பட்டியல் இல்லையெனில், இந்த மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்து விடும்.
சர்வதேச மேற்பார்வையின் கீழ் டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல், இலங்கையிலும் மற்றும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் DNA ஒப்பீட்டு மாதிரிகளை (reference samples) சேகரித்தல், மனித எச்சங்களிலிருந்து பெறப்படும் DNA மாதிரிகளுடன் இவை ஒப்பிடப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறை வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். DNA ஒப்பீட்டுச் செயல்பாட்டை (DNA matching process) ஐக்கிய இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றில் மேற்காள்ளுதல்.
04. டி.என்.ஏ சேகரிப்பிற்கான அனுமதி: குற்றங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் மற்றும் பிற உடல் எச்சங்களுடன் ஒப்பீடு செய்வதற்கும், டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிப்பதற்கும் இலங்கை அரசு ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
05. தடயவியல் நிபுணர்களைப் பணியமர்த்துதல் (Forensic Experts Deployment): மினசோட்டா நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத் தரநிலைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்டறியப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழி இடங்களுக்கும் அங்கீகாரம் பெற்ற தடயவியல் மானுடவியலாளர்கள் (Forensic Anthropologists), நோயியல் நிபுணர்கள் (Pathologists) மற்றும் சட்ட நிபுணர்களை உடனடியாகப் பணியமர்த்துதல்.
06. புவிசார் மற்றும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு (Geospatial & Satellite Analysis) : மோதல் காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலப் பகுதிகளைச் சேர்ந்த, அறியப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களிலும் செயற்கைக்கோள் படத் தொகுப்பு மற்றும் புவிசார் பகுப்பாய்வை மேற்காள்ளுதல்.
07. மனிதப் புதைகுழிகளின் பாதுகாப்பும் உடனடி அகழ்வாராய்ச்சியும்: உடனடியான அகழாய்வுபணிகளை (Immediate Excavations) மண்டைதீவு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடயவியல் சான்றுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்ட பிற இடங்கள் உட்பட மனித புதைகுழிகள் கண்டறியப்பட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாகத் அகழ்வு பணிகளைத் தொடங்குதல்.

08. சான்றுகளைப் பாதுகாத்தல் (Evidence Protection): சான்றுகள் அழிக்கப்படுவதையோ மாற்றப்படுவதையோ தடுக்கும் வகையில் அனைத்து தடயவியல் சான்றுகளையும் சம்பவ இடங்களையும் (குற்றவியல் இடங்கள்) பாதுகாத்து பராமரித்தல்.
09. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்பு (Victim Family Involvement) : அனைத்து விசாரணைச் செயல்பாடுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் வெறும் தகவல் பெறுபவர்களாக அல்லாமல், விசாரணை மற்றும் அடையாளம் காணும் செயல்முறையின் முக்கிய பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும்.
மேலும் அவர்களுக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல், DNA பரிசோதனை முடிவுகள், மனித எச்சங்களின் அடையாளம் தொடர்பான தகவல், சட்ட உதவி, உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
10. தடையற்ற மேற்பார்வை (Unrestricted Oversight): அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக, அடையாளங் காணும் செயல்பாட்டில் ஈடுவதற்கு சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு முழுமையான, தடையற்ற அனுமதியை வழங்குதல். அவர்களுக்கு ஆவணங்கள், தரவுத்தளங்கள், புதைகுழி இடங்கள் மற்றும் தடயவியல் ஆதாரங்களுக்கு முழுமையான தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும்.
11. காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான அறிக்கையிடல்: பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுவது குறித்த முன்னேற்றம், குற்றங்கள் இழைக்கப்பட்ட விவரங்கள், அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கட்டளைச் சங்கிலி (chain of command) ஆகியவை குறித்து வெளிப்படையான அறிக்கையிடலை உறுதி செய்ய அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுதல். அதில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், எத்தனை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன, எத்தனை DNA ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எத்தனை குடும்பங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது போன்ற தகவல்கள் குறித்த இடைவெளிகளில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.

12. பொறுப்புக்கூறல் (Accountability): வலிந்து காணாமல் ஆக்குதல் என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் அடிப்படையாகத் தாக்கும் ஒரு தீவிரமான குற்றமாகும். எனவே, விசாரணைகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அறியும் முயற்சியில் மட்டுமே முடிவடையக் கூடாது. கட்டளைப் பொறுப்பு (command responsibility), நிறுவனப் பொறுப்பு (institutional responsibility) மற்றும் அரச பொறுப்பு (state responsibility) குறித்து விசாரணை நடத்துதல் என தொடர் நடவடிக்கை தேவை.
13. உடல் எச்சங்களை உறவினரிடம் கையளித்தல்: தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களை அவர்களின் இரத்த உறவினர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்வதுடன், குடும்பங்கள் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்கும், இறுதிச் சடங்குகளைக் கண்ணியமான முறையில் நிறைவேற்றுவதற்கும் அனுமதித்தல். காலம் மிகவும் முக்கியமானது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதே தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகளின் நீண்ட கால உத்தியாகும்.
தற்காலிக விசாரணைக் குழுக்கள் அமைத்தல், மற்றும் உறுப்பு நாடுகள், பிராந்திய அமைப்புகள் (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை), உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் போலி வாக்குறுதிகள் மூலம், ஐ.நா அமைப்புகளின் அழுத்தத்தைத் தணிப்பதே இந்தத் தாமதத்தின் நோக்கமாகும். எனவே, இலங்கை தெளிவான முடிவுகளை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய, குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய நடைமுறைத் திட்டத்தை சர்வதேச சமூகம் வகுக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்திற்கான அழைப்பு
பல தசாப்தங்களாக உண்மைக்காகக் காத்திருக்கும் குடும்பங்களை மேலும் காத்திருக்கச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. தற்காலிக ஆணைக் குழுக்களும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்த வெறுமனே வாக்குறுதிகளும் இனிப் போதாது.
அளவிடக் கூடிய முடிவுகள், தெளிவான காலக்கெடுக்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு என்பனவே தற்போதைய அவசிய தேவைகளாகும்.
ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசாங்கத்துடனான இராஜதந்திர, பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த ஈடுபாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முதன்மை நிபந்தனைகளாக முன்னிறுத்த வேண்டும்.

எமது முதன்மை முன்னுரிமைகள்
01. குற்றவியல் நீதி (Criminal Justice): இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் OSLAP உட்பட நீதிச் செயல்பாடுகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதையும், சர்வதேச குற்றவியல் நீதி முறைமைக்கு (international criminal justice mechanism) உடன்படுவதையும் உறுதிசெய்தல்.
02. மீண்டும் நிகழாமை (Non-Recurrence): உரிய அதிகாரப் பகிர்வு, தமிழ் தேசத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைப் உறுதிப்படுத்துதல்.
03.இழப்பீடுகள் (Reparations): தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட தமிழர்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதற்கும் விரும்புவோரின் முழு சம்மதத்துடன் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மறுசீரமைத்து, வடக்கு-கிழக்கு பிராந்தியத்தை தீவின் ஏனைய பகுதிகளுக்கு இணையான நிலைக்குக் கொண்டு வருதல்.
வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலம், வாழ்வாதாரம், சமூக உட்கட்டமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் பலர் பல ஆண்டுகளாகத் தங்களது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது..
ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகும் போது, சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் இழக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், வயதான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உண்மையான நிலையை அறியாமலேயே இறந்து போகும் நிலையும் தொடர்கிறது.
இனி ஒரு குடும்பமும் “என் அன்புக்குரியவர் எங்கே?” என்ற கேள்வியுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவது உட்பட, உண்மை, அடையாளம் காணுதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய சர்வதேச கண்காணிப்பு செயல்திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
உண்மை மறைக்கப்படக்கூடாது, பெயர்கள் மறைக்கப்படக்கூடாது, சான்றுகள் அழிக்கப்படக்கூடாது, நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.