மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸார் தரப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியாளர்கள் இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கபடப்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் (Traffic Control and Road Safety Range) பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி. செனதீர விளக்கமளிக்கையில்,
போக்குவரத்து விதிமீறல்கள்
பெறுநர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறி செய்திகள் பரப்பப்படுகின்றன.

சில நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதம் அதிகரிக்கும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர், பெறுநர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
இதுபோன்ற இணைப்புகள் மூலம் மக்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, பின்னர் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை இழந்ததாக பொலிஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக வாகன சாரதிகளை இணையதளங்களுக்கு வழிநடத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து பொலிஸார் அனுப்புவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபராதங்களை செலுத்துவதற்கான ஒரே இணையவழி வழிமுறை
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையவழி வழிமுறை GovPay ஆகும்.
இதில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகின்றது.
"இலங்கை போக்குவரத்து பொலிஸ் துறையினால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்குத் தனி இணையதளம் எதுவும் இல்லை. எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி மற்றும் பிற இரகசியத் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோசடிக்கு பலியானவர்கள், விசாரணைக்காகத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து அபராதங்கள் எனக்கூறப்படும் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு கோரும் அழைப்புகளை புறக்கணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளை வலியுறுத்தியுள்ளது.