பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு ஒரே நாளில் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி
16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து, 14 வயது சிறுமியை பாரிய பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத் தண்டனை
இதனுடன் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று குற்றவாளிகள்
மூன்றாவது சம்பவத்தில், 14 வயது சிறுமியை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கடுமையான தண்டனைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.