நாமலின் கைது குறித்த தகவல் : அநுர தரப்பு வழங்கிய பதிலடி
அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலானவை என்றும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்தச் செயல்களை நன்கு அறிந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல்
சிஐடி, எஃப்சிஐடி மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற அமைப்புகள் நாமல் ராஜபக்சவின் நடத்தையின் முழு அளவையும் இன்னும் வெளிக்கொணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்களின் மூலம் தவறுகளை நிரூபிப்பதே விசாரணைகளின் நோக்கம் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் அச்சம் கொள்வது இயல்பானது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ச கைது நடவடிக்கையை எதிர்கொள்வதாக நம்பியிருந்தால், அவர் தனது பேரணியை முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தவறு செய்தவர் எவராயினும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல் எதிர்கொள்ளுமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.