தமிழ் உறவுகளின் போராட்டத்திற்கு வெற்றிலைத் தட்டோடு அழைப்பிதழா: பதில் தலைமைகளின் போலி அரசியல்
சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.
ஆனால், இந்தப் புனிதமான மக்கள் போராட்டக்களத்திற்கு 'எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக் கூறிப் போராட்டம் மற்றும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் என்பது திருவிழாவா அல்லது விளையாட்டு விழாவா, வெற்றிலை பாக்கு வைத்துத் தட்டோடு வந்து அழைப்பதற்கு இது என்ன கல்யாண வீடா, இது ஓர் இனத்திற்கு நீதி வேண்டிய போராட்டம். உணர்விருப்பவர்கள் பங்குகொள்வார்கள், உணர்வற்றவர்கள் ஒதுங்கியிருப்பார்கள்.
தமிழினப் படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் எதிராக உள்ளத்தில் உணர்வில்லையெனில், காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் சிறிலங்கா அரசைப் பன்னாட்டு அரங்கில் பொறுப்புக் கூற வைப்பதற்குத் திராணியில்லையெனில், அன்று முதல் இன்றைய அநுர அரசு வரையுள்ள சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் உள்நோக்கத்தோடு பச்சைத் துரோகம் செய்யும் எண்ணம் இருப்பின், தாராளமாக ஒதுங்கியிருங்கள்.

அதைவிட்டுவிட்டு, மக்கள் திரளும் போராட்டக்களத்தைப் பார்த்து 'எங்களை யாரும் கூப்பிடவில்லை' என்று அறிக்கை விடுவது என்ன நியாயம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப் பல கட்சிகளும் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பங்கெடுத்திருந்தன. அவர்களுக்கு யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்கள், மக்களுக்காக நிற்க வேண்டும், போராட வேண்டும் என்ற இன உணர்வு இருந்ததால் அவர்கள் மனமுவந்து பங்குகொண்டார்கள்.
இதைவிட முக்கியமாக, தமிழரசுக் கட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த வெற்று அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் மக்களோடு களத்தில் பங்குகொண்டது தான் இங்கு கவனிக்கத்தக்க கூடுதல் விடயமாகும்.
பதில் தலைவர்கள்
தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு அறிக்கையை விட்டவர்கள் யார், கட்சியின் பொதுக்குழுவா, மத்திய குழுவா, அரசியற்குழுவா, இவை எதுவுமே இல்லை.
அறிக்கை விட்ட இருவரும் மக்கள் மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா அல்லது கட்சியில் கட்சி உறுப்பினர்களால் முறைப்படி பதில் பொறுப்புக்களிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்றால் அதுவும் இல்லை.

தம்மிடம் சட்டம் இருக்கிறது என்பதற்காகச் சட்டத்தின் குறுக்குச் சந்துகள் ஊடாகப் பொறுப்புக்களைக் கைப்பற்றி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள்.
மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படையான பதிலடி இந்த போலியான புறக்கணிப்பு அறிக்கையையும் மீறி, தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்குத் தாயகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதை போராட்ட மற்றும் மாநாட்டு ஒளிப்படங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன.
தமிழரசுக் கட்சி
- யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (தமிழரசுக் கட்சியின் தெரிவுநிலைத் தலைவர்)
- மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன்
- மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத்
- வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
- அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்
- திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஆகியோர் (யாழில் நடைபெற்ற மாநாட்டிற்கு நேரில் வருகை தர இயலாத போதும், ஊடக சந்திப்பினை நிகழ்த்தித் தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்விலே நேரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடததக்கது)
தமிழரசுக் கட்சியிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எவருமே வெற்று அறிக்கையைப் பொருட்படுத்தாது பங்கெடுத்துள்ளனர். இதிலிருந்தே கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகிறது. சட்டத்தின் ஓட்டைகள் வழியே தமிழரசுக் கட்சியின் பதவிகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன.

ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நேற்றைய நிகழ்வில் முழுமையாகத் தெளிவாகிவிட்டது.
சனநாயகப் பாரம்பரியத்தின் சீரழிவு மக்கள் என்று வந்துவிட்டால் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போராட்டக்களத்தில் முன்னிற்பதுதான் ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைப் பண்பு. ஓர் அரசியல் கட்சி மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்ட வேண்டும். அந்த குறைந்தபட்ச அரசியல் சனநாயகப் பண்புகூட இல்லாத நிலையில்தான் தற்போதைய தமிழரசுக் கட்சி உள்ளது.
அழைப்பிதழ் வைத்தால் மட்டுமே போராட வருவோம் என்பது என்ன மனநிலை, இவர்கள் யாருக்கானவர்கள், இவர்கள் செய்யும் அரசியல் யாருக்கானது.
வழக்கறிஞர் என்பதால் சிறிலங்காவின் நீதிமன்றங்களுக்குள் மட்டும் தனது சட்ட வித்துவத்தைக் காட்டுவதுதான் அரசியல் என்று எண்ணுபவர்களின் கைகளில் ஒரு சனநாயக இயக்கம் சிக்கியுள்ளது.
தார்மீக உரிமையற்று, அடிப்படை சனநாயகத்திற்கு முரணாகச் சிக்கித் தனது நீண்ட நெடிய சனநாயகப் பாரம்பரியத்தை தமிழரசுக் கட்சி இழந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை
மக்களின் வலியை உணராதவர்கள் யாருக்கானவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 'இனப்படுகொலைக்குச் சான்று இல்லை', 'புலிகளையும் விசாரிக்க வேண்டும்' என்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் பிணையெடுக்கத் திரிந்து கொண்டிருந்த சின்னக் கதிர்காமருக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் வலி எப்படிப் புரியும்.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் நடக்கும் போதும், நடந்த பின்னரும் மக்கள் முகாம்கள் மற்றும் ஐ.நா. அலுவலகங்கள் தோறும் கால்கடுக்க நடந்து திரிந்த துயரக் காலங்களில், தமிழினப்படுகொலைப் போரை முன்னின்று நடத்திய மகிந்த ராஜபக்ச, பிள்ளையான், கருணாவின் படங்களுடன் தேர்தல் வாக்குக் கேட்ட மட்டக்களப்பின் இளம் இரத்தத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி எப்படிப் புரியும்.
தென்னிலங்கையில் ஏதேனும் ஒரு சிறு சனநாயக உரிமை மீறல் என்றால் கூட 'சர்வஜன நீதி' என்ற பெயரில் சிங்கள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து களமிறங்கி அறிக்கை விடும் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு, சொந்தத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் வலியும்.
நீதிக்கான போராட்டத்தின் வலியும் புரியாமல் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் அது அவர்கள் தவறல்ல அதை உணர்ந்த தமிழ் மக்கள் அவர்களை மக்கள் மன்றத்திலிருந்து ஏற்கனவே அகற்றிவிட்டார்கள். அதை உணர்ந்த தமிழரசுக் கட்சியினரும் கட்சித் தலைவர் தேர்தலின் ஊடாக அவர்களை ஓரங்கட்டிவிட்டார்கள்.
தமிழ் மக்கள் எப்போதும் தெளிவானவர்கள். இதற்குப் பிறகும் அவர்களை அந்தப் பதில் பொறுப்புக்களில் நீடிக்க விடுவதா இல்லையா என்பதை தமிழரசுக் கட்சியினரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.