அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்
ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சர்ச்சைக்குரிய, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
57 வயதான எராஜ், கொழும்பு ஹவலொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும்
மர்மமான முறையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பல மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

9 அடி உயரமுள்ள கதவு சட்டகத்தில் பட்டியை போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணத்திலும் இதேபோன்று கதவு சட்டகத்தில் பட்டி மூலம் தூக்கிடப்பட்டிருந்தது.
இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தீவிரமான ஒற்றுமைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை எராஜ் ரவீந்திர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் தெரிவானார். 2022 பெப்ரவரி 10ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
துப்பாக்கி மேயர்
இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார். அச்சுறுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டுக்கு 2019 இல் இவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சதோச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஊழியர்களை அரசியல் பணிகளுக்கு பயன்படுத்தி அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக எராஜ் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் ஹவ்லாக் சிட்டியின் CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ச குடும்பத்திற்காக மோசடிகள்
எராஜ் மற்றும் கபில ஆகியோர் ராஜபக்ச குடும்பத்திற்காக பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்படும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

அண்மையில் மகிந்த ஆட்சியில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரட்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருந்தார்.
குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.