அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் சோதனை
சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.