முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு அதிரடி
ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய குடியரசு
இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும். அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.

அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார். இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது.
எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.

எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.