ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ரத்தம் சிந்தும் போராளிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு குறியீடு, தியாக தீபம் திலீபன் அன்னை பூபதி இருவரது அகிம்சை போராட்டம் இன்னொரு குறியீடு.
அதே சமயம் யோதிலிங்கம் போன்றவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், மக்கள் திரட்சி, கருத்தரங்குகள் போன்றவை இன்னொரு குறியீடு, இவற்றில் மூன்றையும் ஒன்றையொன்று தாங்கி நின்ற தாங்கு சக்திகள்.
இவையெல்லாம் போராட்டத்தின் தேவைகளை பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு பகுதிகள். இங்கே யோதிலிங்கத்தின் போராட்டத்தை, அவருடைய விடுதலைக்கான பங்களிப்பை, அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் வகித்த வகிபாகத்திலிருந்து அவரை ஒரு குறியீடாக நிலை நிறுத்தி அவருக்கே உரித்தான அந்தத் தளத்திலிருந்து அவரை எடை போடுவதாக இந்தப் பத்தி அமைகிறது.
போராட்டத்தின் குறியீடு திலீபன்
தியாக தீபம் திலீபனை தமிழ் சமூகம் ஒரு போராட்ட குறியீடாக சித்தரித்து நிலை நிறுத்தியுள்ளது. திலீபன் என்ற சொல் ஒருவரின் பெயர் அல்லாமல் ஒரு பொருள் பொதிந்த, வரலாற்று உணர்வு கலந்த, தமிழ் மக்களின் எண்ணங்களும், உணர்வுகளும், அபிலாசைகளும் கலந்த சொல்லாக திலீபன் "தியாக தீபம்" என்ற போராட்டத்தின் குறியீட்டு பதமாக நிலை பெற்று விட்டது.
இந்தக் குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அன்னை பூபதியின் போராட்டம் அமைந்திருந்தாலும் அது முன்னும் பின்னும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. அதற்கான காலச் சூழமைவும் அன்றைய கால சூழ்நிலையில் இடம் கொடுக்கவில்லை.

ஆயினும் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதப்பட்ட பின்னராவது தியாக தீபத்தின் "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற மக்களுக்கான இறுதி வேண்டுகோளை முன்னெடுத்து இருக்க வேண்டும். போராடுவது என்பது வாழ்வுக்கானது அன்றி சாவுக்கானது அல்ல. ஆகவே தொடர் சுழற்சி முறையிலான அகிம்சை போராட்டத்தை நடத்தி இருக்க முடியும்.
ஆனால் திலீபனின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றக்கூடிய போராட்டத்தை முன்னெடுக்காமல் அதற்கு மாறாக அவருடைய போராட்டத்தை போற்றியும், புகழ்ந்தும், மதித்தும் ஆண்டுதோறும் அஞ்சலியை மட்டுமே செலுத்துவதும், அதனையே போராட்டமாக தொடர்வது தமிழினத்தின் துரதிஷ்டம்தான்.
உலகளாவிய விடுதலைப் போராட்டங்களில் தீவில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போராட்டங்கள் இலகுவில் வெற்றி பெற்றவை அல்ல. காரணம் தீவில் அரசுக்கு எதிராக போராடுகின்ற போது அரசு தனக்கேற்ற அனைத்து வளங்களையும் கொண்டிருப்பதோடு, சர்வதேச உறவுகளையும், சர்வதேச உதவிகளையும் அது இலகுவாக பெறக்கூடியது.
ஆனால் தீவுக்குள் போராடுகின்ற அமைப்புகள் அத்தகைய வசதி வாய்ப்புகளைக் கொண்டவை அல்ல. அவர்களுக்கான வளங்களும், உதவிகளும் வரையறுக்கப்பட்டவை என்ற அடிப்படையில் எப்போதும் போராடுபவர்கள் பலவீனமான நிலையிலே இருப்பர்.

இத்தகைய ஒரு நிலையில்தான் ஈழப் போராட்டமும் இருந்துள்ளது. உலகளாவிய ஆளுகைப் போட்டியின் கேந்திர ஸ்தானத்தில் ஈழப்போராட்டம் நடத்தப்பட்டதால் அது உலக ஆதரவை இழந்து ஈற்றில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
நிலையிலிருந்து நாம் கடந்த 17 ஆண்டுகளாக எத்தகைய போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டோம், அந்த முன்னெடுப்புக்களில் சி.அ.யோதிலிங்கத்தின் பங்களிப்பு என்ன அதற்கு முந்தைய காலத்தில் அவருடைய பங்களிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
தமிழ் இனத்தின் அடையாளம் சி.அ.யோதிலிங்கம்
ஒரு இனம் தன்னை தேசியமாகவும், தேசமாகவும் திரள்வதற்கு அந்த இனத்தின் அறிவியல் கொள்ளளவும், அறிவியல் மட்டமும் தான் அந்த இனத்திற்கான அறிஞர்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களை தோற்றுவிக்கும். தமிழினத்தின் அறிவியல் மட்டம் மிக வறுமையில் இருப்பதுதான் தமிழினத்தை தலைமை தாங்க முற்பட்டோர், மற்றும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் கற்பனைவாதிகளாகவும், வறண்டவாதிகளாகவுமே தோற்றம் பெற்றிருக்கின்றனர்.
அத்தகைய தமிழினத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முற்போக்காளர்களும், அறிஞர்களும் தோன்றியிருக்கிறார்கள் தான், அந்த வரிசையில் கடந்த வாரம் தமிழர் தேசம் இழந்துவிட்ட சி.அ.யோதிலிங்கம் தமிழ் தேசியவாதியாகவும், முற்போக்காளனாகவும் ஈழத்தமிழர்களிடையே அடையாளம் காணப்படுகின்றார்.
அவருடைய வாழ்வும், அவருடைய தமிழினத்திற்கான பங்களிப்பு தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு பாடமாகவும் முன்னுதாரணமாகவும் அமைகின்றது. ஈழத் தமிழர்களை பொருத்தமட்டில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் என்ற தமிழர் தேசத்தின் அரசியல் கருத்தியல் தூண் ஒன்று சரிந்துவிட்டது என்ற துன்பச் செய்தியாகவே தெரிந்தது.

ஆனால் அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று, அத்தகைய ஒரு மனிதரை காண்பதும் அல்லது அவ்வாறு செதுக்கப்படுவதும் இலகுவானது ஒன்று அல்ல. அது வரலாற்று நிர்பந்தங்களுக்கூடாக, வரலாற்று நிபந்தனைகளுக்கூடாக, வரலாற்று வழித்தடத்தில் அவர் தன்னை ஒரு பண்பாட்டு வாழ்வியலுக்கூடாக, கொள்கை பற்றாளனாகவும், ஈழத் தமிழர்களுக்கு உரித்தான இடைவிடாத முயற்சியாலனாகவும் எவ்வாறு தடம் பதித்தார் என்பதுவே இங்கே முக்கியமானது.
அதிலும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய பங்கும், அவர் விட்டுச் சென்ற பணி பற்றியே இங்கே கவனத்திற்கு கொள்ள வேண்டும்.
அவர் ஈழப்போராட்டத்தின் அனைத்து பக்கங்களிலும் பயணித்த, அதன் அனைத்துப் பக்கங்களையும் நன்குணர்ந்த, நன்கு தெரிந்த, நடுமாடும் போரட்ட வரலாறு ஒன்று இன்று நம்மிடத்தில் இருந்து வரலாற்றுடன் கலந்துவிட்டது. அவர் வாழ்வும் வரலாற்றில் கல்லும் முள்ளும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது.
எங்கள் தேசத்தின் நெருக்கடிமிகுந்த காலத்தில் தமிழர் தேசத்தின் நலனுக்காக கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அப்பால் எது சரியோ எது பொருத்தமானதோ அந்தப் பக்கத்திலேயே அவர் நிலை எடுத்தார்.
தமிழ் மக்களின் நலனுக்காக மட்டுமே தொடர்ந்து ஒலித்தத அந்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தொடர அரசியல் செயற்பாட்டில் சலிப்பின்றிய ஓய்வுன்றிய போராட்ட முயற்சியாளன். தமிழ் மக்களின் நலனுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் அவர் கால் தடம் பதிக்காத இடமே கிடையாது. அவரின் இழப்பு என்பது தமிழ் அரசியல் பரப்பில் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி தான்.
அடிமைபடுத்தப்பட்ட மக்களுக்கான குரல்
யார் இந்த யோதிலிங்கம்? செம்மண் பிரதேசமான குப்புளானில் பிறந்த அவர் செம்மண் பிரதேசத்தில் சிறுவனாக இருந்தபோது சிறந்த பாடசாலையில் மேடை பேச்சாளராக சொற்பொழிவுகளை ஆற்றியதுண்டு. கோவில்களில் சமயப் பிரசங்கங்களை செய்ததுண்டு.
சிறந்த ஆன்மீகவாதியாக இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்த யோதிலிங்கம் என்ற அந்த சிறுவன் தமிழரசு கட்சியின் கண்களில் பட்டார். அதனால் அன்றைய காலத்தில் தமிழரசுக் கட்சியின் கட்சிக்காரர்கள் தோளில் போடும் கட்சிச்சாலையை இந்த குழந்தை பேச்சாளன், தனது வேட்டியாக கட்டிக்கொண்டு மேடையிலே முழங்கினார் என்பதிலிருந்து அவருடைய சிறு பிராயத்தை புரிந்து கொள்ள முடியும்.
சிறுவன் யோதிலிங்கம்த வளர்ந்த இளைஞனான போது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக உழைப்பாளர் சங்கத்தில் இணைந்து அடித்தட்டு மக்களுக்காக, சமூக சமத்துவ நீதியின் குரலாக ஒழித்தார். சைவ சமய பாரம்பரியத்தில் வளர்ந்த அவர் சைவ சமயத்தின் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் அவர் பண்பாட்டு வாழ்வை இழக்கவில்லை. மதத்தை இழக்கவில்லை. ஆனால் அந்த மதம் சொன்ன சாதியத்தை மாத்திரம் எதித்தார். அதுவே அவருடைய வாழ்வின் உன்னத பக்கமாகும். அவர் ஒரு பண்பாட்டு வாழ்வியலிலிருந்து மறக்கவில்லை.
அந்த வாழ்வை துறக்கவில்லை, அந்த வாழ்வை தன்னுடைய வாழ்வியலாக ஏற்று கொண்டவர். அதனால்தான் அவர் ஒரு தேசியவாதியாக பின்னாளில் மிளிரமுடிந்தது. சைவத்தின் சாதிய கட்டமைப்பை கடந்தது, அதனை எதிர்த்தது என்பனவே அவரை மார்க்ச சிந்தனையின் பாலும், சோசலீச சிந்தனையின் பாலும் இழுத்துச் சென்றது.
பல்கலைக்கழகத்தில் அவருடைய பேச்சாற்றல் அவரை சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது. இவர் பல்வேறுபட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இருந்த காலத்தில் அவர் ஈரோஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஈழ மக்கள் பொது மன்றத்தில் மாணவர் அமைப்பை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் பிரகாசமானவராக திகழ்ந்தார்.
பின்னாளில் ஈரோஸிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) உருவானபோது அதன் முக்கியஸ்தர் ஆனார்.
தமிழ் அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிச்சம்
ஆனால் பின்னாளில் அவர் அந்த இயக்கத்தில் கொள்கை ரீதியில் முரண்பட்டு வெளியேறினாலும் அவர் ஆயுதப் போராட்டத்தோடு இருந்த காலத்திலும் அதற்கு பின்னைய காலத்திலும் அவர் ஒரே மரபியலேயே இருப்பதை காணலாம்.
அது என்னவெனில் எப்போதும் மக்களுடன் நிற்பது, ஆர்ப்பாட்டம் ஊர்வலம்செய்தல், மக்களை அறிவு மயப்படுத்தல், கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்துதல், எழுதுதல், துண்டு பிரசுரம் வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய "கிளர்ச்சி செய்தல்"என்ற போராட்ட மரபில் அவர் ஒரு கிளர்ச்சியாளனாக ஆயுதப் போராட்ட காலத்திலும் செயல்பட்டார்.

ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் தொடர்ந்து தன் இறுதி மூச்சு வரை கிளர்ச்சியாளனாகவே செயற்பட்டுள்ளார் என்ற இந்த பரிமாணத்தை அதன் தனித்துவத்தை தமிழ் அறிவியலாளர்களும், அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாக்ஸ் சிந்தனையாளர்கள் என்றும், சோசியல் சோசியலிஸ்ட்கள் என்றும் தம்மை அழைத்துக் கொண்டவர்கள், தமிழிழ விடுதலைப் போராட்டத்தில் “கோட்பாட்டு கோளாறு“ உடையவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை முகத்தை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்குள் ஒரு போராட்டத்தை நடத்திய மனிதர் ஆவார்.
அதனால் அவர் சார்ந்து இருந்தவர்கள் அவரைப் பற்றி பலவாறு விமர்சனம் செய்ததுண்டு. ஆனாலும் விமர்சனங்களை தாண்டி அவர் எதை சரி என்று இனங்கண்டாரோ, எது பொருத்தமானது என்று இனங்கண்டாரோ அதனைத் தனது 40 ஆண்டுகால விடுதலை அரசியல் வாழ்வு முழுவதிலும் பின்பற்றி தமிழ்மக்களின் முன்னே தன்னை நிலைநிறுத்தியவர். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆபத்துக்களை எதிர்கொண்டு பணியாற்றிய ஒரு நடைமுறைவாதி.
யோதிலிங்கம் படைப்பில் 34 புத்தகங்கள்
தனது பல்கலைக்கழக காலத்தில் சலிப்பின்றிய கற்கையாளன், பல்கலைக்கழகத்தைத் தாண்டி தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்து கற்கநெறிகளிலும் பங்குபற்றியவர் அந்தக் கட்டணர்களின் பட்டியலை பட்டியலிட ஒரு தாள் போதாது. அந்தப் பல்துறை அறிவித்தான் அவரை 34 நூல்களை எழுத வைத்தது.
இத்தகைய வரை அறிவியல் கருத்தமர்வில் அதீத அக்கறையாளன், மனிதவுரிமைவாதி அதற்குப்பின்னர்தான் அவர் அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, ஓய்வுநிலை ஆசிரியர், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் என யோதிலிங்கம் அவர்கள் தெரிகிறார். மார்க்சிச சித்தாந்தத்தில் அவருடைய புலமையும் ஈடுபாடும் அவரை முக்கிய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் தத்துவவியல் ரீதியாக முடிவுகளை எடுக்க வைத்தது.
"ஒரு பிரச்சனையில் பல்வகைப்பட்ட முரண்களும், பல்வகை அணிகளும் இருப்பதாக புறப்படுதளத்தில் தோற்றமளித்தாலும் அவை பிரதான செயற்படுதளத்தின் மையப்புள்ளியில் இரு கூறுகளாக மாத்திரமே பிளவுபடும்".
இந்த மார்க்சிச தத்துவவியல் உண்மையை அவர் ஈழத் தமிழர் இனப்பிரச்சினையிலும் அடக்குவோன், அடக்கப்படுவோன் என்ற இரு கூறுகளாக மட்டுமே பிளவுபட்டிருக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தார். இதனை இயக்க முரண்பாடுகளுக்கு இடையில் ஒருவரை ஒருவர் அழிக்கின்ற செயல்களின் போதும் அவர் அதில் பங்குபற்றது ஒதுங்கினார்.
ஆதலால்த்தான் அவர் ஒடுக்குவோன் மேற்கொள்கின்ற வன்முறையையும், ஒடுக்குதலுக்கு உள்ளானோன் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக மேற்கொள்ளுகின்ற தற்காப்பிற்கான வன்முறையையும் சமப்படுத்த முடியாது, சமப்படுத்தவும் கூடாது என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார். அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பக்கமே நின்றார்.
தற்காப்புக்கான வன்முறையை போராட்டமாகவே அவர் கண்டார். தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்குள் உருவான பல்வகைப்பட்ட உள் முரண்பாடுகளை பகை முரண்பாடாக பார்க்காது அதனை நட்பு முரண்பாடாகவே அவர் இனம் கண்டார்.
முரண்பாட்டுத் தளத்தில் சேதாரங்கள் ஏற்படுவது இயல்பானதே அதை தவிர்க்க முடியாததும் கூட. ஆதலால் தத்துவார்த்த ரீதியில் அவர் பொது எதிரியை தெளிவாக இனம் கண்டு இருந்தார்.
சிங்கள பௌத்த பேரனவாதம்
சிங்கள பௌத்த பேரனவாதம் தமிழ் மக்களின் பொது எதிரி மாத்திரமல்ல அது நிரந்தர எதிரியும் என்பதை அவர் தெளிவாக இனங்கண்டார். ஆதலால் தான் அவர் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கிடமின்றி சமரசத்துக்கு செல்ல மறுத்தார்.
ஈழத் தமிழர்களின் பொது எதிரியான சிங்கள பௌத்த பேரனவாதிகளுடன் கூட்டு சேர்வதையும் எதிர்த்தார். தாம் கொண்ட தமிழிழ தனியரசு என்ற கொள்கையை கைவிட்டு தமது சுய நலங்களுக்காக சிங்கள அரசுடன் சமரசத்துக்கு உடன்பட்டு அடக்குவனுடன் கூட்டுச் சேர்ந்த தமிழ் சோசலிச மார்க்சிச இயக்கங்களையும் தோழர்களையும் தனது கருத்துக்களினால் கடுமையாக எதிர்த்தார்.
தூய்மைத்துவம் என்ற ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது என்பதை அவர் புரிந்ததன் விளைவுதான் எது காலச் சூழலுக்கு பொருத்தமானதோ அதனை ஏற்று அதன் பக்கமே சாய்ந்து நின்றார்.

அவருடைய சாய்வு எக்போதும் தமிழ் மக்களின் பக்கமாகவுமே இருந்தது. அவர் சர்வதேச அரசியல் பற்றியும் பிராந்திய அரசியல் பற்றியும் பேசியதுண்டு. ஆயினும் அதில் அவர் ஆழமான கருத்துக்களையோ போக்கையோ அல்லது அதில் அவர் அதீத நாட்டத்தையோ கொண்டிருக்கவில்லை.
அவர் தமிழினத்தின் விடுதலை பற்றி மாத்திரமே பேசினார். அதிலும் தமிழ் மக்களை எவ்வாறு ஒன்று திரட்டுவது? எவ்வாறு போராடுவது? எவ்வாறு கிளர்ச்சி செய்வது? எவ்வாறு விடுதலை நோக்கி பயணிப்பது? என்பது பற்றியே அவர் முழுமையான கவனம் செலுத்தினார்.
அதற்காகவே அவருடைய வாழ்நாள் செலவாகியது. அவருடைய செயற்பாடுகளினால் தமிழ் சமூகத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன? எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார்? என்பது பற்றி தத்துவார்த்த ரீதியாக ஆராய்வது தமிழ் அறிவியலாளர்களுடைய பொறுப்பாகும். ஈழத்தமிழர்களை தேசமாக திரட்டுவதற்காக தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சிகள் என அனைத்தையும் கடந்து அவர் அயராது உழைத்தார்.

அவரின் தமிழ் தேசிய கருத்தியலில் எந்த குறைபாடும் இருந்ததில்லை. அத்தகைய தமிழ் சமூகத்தின் நலனுக்காக மட்டுமே ஓயாது உழைத்த ஒரு மாமனிதன் இன்று ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டார். தமிழர் தேசத்தின் ஓயாது சுழன்றடித்த அரசியல் கருத்தியல் சண்டமாருதம் ஒன்று இன்று ஓய்ந்து விட்டது.
ஈழத் தமிழர்களின் அரசியலில் அதன் சமூகவியலில் இத்தகைய செயற்கரிய செயல்களை செய்யவல்ல யோதிலிங்கங்கள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய மாமனிகளை செதுக்குவதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் பணியாக அமையும். தமிழ்ச்சமூகம் அரசியல் கிளர்ச்சிச் சிற்பிகளை பிரசவிப்பதனால் மாத்திரமே தமிழினத்திற்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்.