பிரான்சில் போராட்டம் தீவிரம்: 70,000 பாதுகாப்புப் படையினர் களத்தில்
பிரான்சில் பாடசாலைகளின் மோசமான நிலைமை மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2026 ஒக்டோபர் 17 அன்று நடைபெற்ற போராட்டங்களில் சூறையாடல்கள், வன்முறைகள் மற்றும் மோதல்கள் வெடித்ததில் 2,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
இன்று அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தில், மீண்டும் அத்தகைய வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க, முன்னைய வாரத்தை விட 20வீத கூடுதல் பொலிஸாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரான்ட் நுனேஸ் உத்தரவிட்டுள்ளார்.

பாரிஸின் மத்திய பகுதிகள், லியோன், மார்சேய், நைஸ் போன்ற முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் போராட்டங்களை நடத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர் அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பாரிஸில் முக்கிய கலாச்சார மையங்களான லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் மியூசி டி ஓர்சே ஆகியவை மூடப்பட்டுள்ளன. குறைந்தது 24 மெட்ரோ தொடருந்து நிலையங்கள் மூடப்பட்டு, வணிக நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.
70ஆயிரம் பொலிஸார்
2026 செப்டம்பரில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், தற்போது வாழ்க்கைச் செலவு மற்றும் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானின் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.

மாணவர்கள் பிரதிநிதிகளை மெக்ரான் சந்தித்துப் பேசியபோதிலும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில், தீவிர வலதுசாரி தலைவரான மரீன் லீ பெனின் தேசிய பேரணி கட்சியின் பிரசாரக் கூட்டம் ஓர்லியன்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு எதிராக 20,000 முதல் 30,000 வரை எதிர்ப்பாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கேயும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.