சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)
ஜெர்மனியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர் மார்டிக் காக் உடனான நேர்காணலின்போது மேற்குலக ஊடகங்கள் மற்றும் மேற்குலக நாடுகளை கடுந்தொனியில் திட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் கோரியதாக ஊடகவிலயாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆத்திரமுற்ற அவர் சிங்களமொழியில் ஒரு வார்த்தையை பேசியிருந்தார்.
சர்வதேச நாணய நிதிய நிபந்தனை
சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்படுவதாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'' மேற்குலக நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இடைவெளி குறைவடைந்துள்ளது. ஜெர்மனிய விஜயத்தின் மூலம் சில விடயங்களை தெளிவுபடுத்த முடிந்தது. எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பரிஸ் காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. சிலவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, ஏனைய சில நிபந்தனைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் இது குறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், அவர்கள் எங்களிடம் மாற்று வழிகளை முன்வைக்குமாறு கோரியுள்ளனர்.
மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தக்கூடிய சில பரிந்துரைகளை எம்மால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. எனவே இதற்கு மாற்று வழிகளை நாம் பரிந்துரை செய்ய உத்தேசித்துள்ளோம்.
அரசாங்க வருமான அதிகரிப்பு
இலங்கையில் அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். தற்போதைய முறைமைகளின் கீழ் அரச வருமானம் மிக வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுகின்றது.
2003 ஆம் ஆண்டு நான் பிரதமர் பதவி வகித்த காலத்தில் இருந்து இந்த விடயத்தை கூறி வருகின்றேன். அடுத்த ஆண்டு நான் தேர்தலில் தோல்வி அடைந்தேன்.
இதனால் என்னால் இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. நாட்டில் பட்டினி பிரச்சினை காணப்படுகின்றது இலங்கையில் பட்டினி பிரச்சினை காணப்பட்டது.
இதனை எவராலும் மறுக்க முடியாது, கடந்த ஆண்டு மிக மோசமான நிலையில் இது காணப்பட்டது. தற்பொழுது இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதாரம் சரிவடையும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு, கைத்தொழில் துறையில் வீழ்ச்சி என பல்வேறு விடயங்களிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. எவ்வாறு எனினும் சுற்றுலாத் துறையில் தொடர்ச்சியாக முன்னேற்றம் பதிவாகி வருகின்றது.
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவ் த சில்றன் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் பட்டினி பிரச்சனை பற்றி கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி
இந்த கூற்றை நாம் நிராகரிக்கவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தொடர்பில் எமக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் அந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை நாம் மறுக்கவில்லை.
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி அடையும் போது இவ்வாறு பட்டினி பிரச்சினைகள் ஏற்படுவது வழமையானதாகும். நாட்டின் கல்வித்துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எதிர்வரும் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டில் கல்வித் துறையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஓராண்டு காலமாகின்றது, பட்டினி பிரச்சினை குறைவடைந்துள்ளது, பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க பெற்றுள்ளது. பொருளாதாரம் ஓரளவு சீரடைந்து வருகின்றது. துரித கதியில் மாற்றங்களை செய்வது நடைமுறை சாத்தியமற்றது.
சனல் 4 ஊடகத்தை பிரித்தானியாவில் பலரும் கண்டு கொள்வதில்லை. அவ்வாறான ஒரு பின்னணியில் சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும்? சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளை மட்டும் ஏன் கேள்வியாக கேட்கின்றீர்கள்?
பல்வேறு வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்
குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான் ஒரு குழுவினை நியமித்துள்ளேன். நாடாளுமன்ற குழு ஒன்றையும் இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமித்திருக்கின்றேன்.
கர்தினால் ஆண்டகையின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பேசக்கூடாது. நான் பேராயர்கள் பேரவையுடன் தொடர்பாடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு இந்த அனைத்து தகவல்களையும் வழங்கி வருகின்றேன்.
என்னிடம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கேள்வி எழுப்ப நீங்கள் இங்கு வரவில்லை. என்னை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
நான் இந்த பிரச்சினையில் தொடர்புபடவில்லை நான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கின்றேன். எனக்கும் இந்த பிரச்சினைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தவே நான் முயற்சிக்கின்றேன். இந்த கார்தினலின் அறிக்கைகளை ஒரு பேப்பரில் எடுத்துக் கொண்டு வந்து இங்கே என்னிடம் கேள்வி எழுப்புவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.
என்னை சிக்கலுக்குள்ளாக்க இவ்வாறான கேள்விகளை கேட்கின்றீர்களா?
இது ஒரு மேற்கத்திய நாடுகளின் பண்பு. அதனையே நீங்கள் திணிக்க முற்படுகின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படாது. அவ்வளவுதான் அதற்கு முற்றுப்புள்ளி.
சில தரப்பினர்கள் சர்வதேச விசாரணைகளை கோருகின்றனர். எனினும் நாடாளுமன்றம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. நான் உங்களுக்கு சொல்ல மறந்து விட்டேன்.
எஸ்பிஐ அறிக்கையில் இந்த தாக்குதலுடன் வெளி நபர்களுக்கு தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, இந்தியா பாகிஸ்தான் சீனா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று நான் குறிப்பிடுகின்றேன். மேற்குலக ஊடகங்கள் நாம் கெட்டவர்கள் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே நடந்து கொள்கின்றன.
மனித உரிமை பேரவையின் அறிக்கை
அந்த நிலையிலிருந்து மாற்றம் பெற வேண்டும். எப்பொழுதும் என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஒரு போக்கினை அவதானிக்கின்றோம்.
அவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்து இடமளிக்க முடியாது பிரித்தானியாவோ, ஜெர்மனியும் சர்வதேச விசாரணைகளை நடத்துகின்றதா?
ஏன் இலங்கையும் ஆசிய நாடுகளும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கூறுகின்றீர்கள்? நீங்கள் அவ்வாறான என்ன விசாரணைகளை நடத்தி இருக்கின்றீர்கள்? நாம் என்ன இரண்டாம் தரப் பிரஜைகளா? நீங்கள் அப்படி நினைக்கின்றீர்களா? இந்த ஆண்டின் நிறைவிற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது.
நாங்கள் மேற்குலக நாடுகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பல்வேறு வழிகளில் இந்த ஆணைக்குழுவை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்றது. அந்த அறிக்கையின் விடயங்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை பிழையானது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்களாக கூறப்படும் எண்ணிக்கை குறைவாகவே இருக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம். நீங்கள் எங்கோ இருந்து வந்து சத்தம் போட வேண்டாம் என ஊடகவியலாளரை ஜனாதிபதி திட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.