எனது தமிழ் ஆசானை போல ஒருவர் சஜித்துக்கு கிடைக்கவில்லை: ரணில் பெருமிதம்
கொழும்பு றோயல் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியரை போல ஒரு ஆசிரியர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கவில்லை என்பதாலேயே அவர் நாட்டை பொறுப்பேற்காமல் ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய அவருக்கு கற்பித்த ஆசிரியர் வி.சிவலிங்கம் தொடர்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வி.சிவலிங்கம் ஆசிரியரிடம் நாம் கொழும்பு றோயல் கல்லூரியில் 1961 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் கல்வி பயின்றோம். அவரிடமே பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கல்வி பயின்றார்.
கற்பிக்கப்பட்ட பாடம்
எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்பிய பெருமையை நாம் ஆசிரியர் சிவலிங்கத்துக்கும் அளிக்க வேண்டும். முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கும் அவர் கற்பித்துள்ளார்.
அந்த காலத்தில் எங்களுக்கு ஏதென்ஸ் நகரத்தில் 2,500 வருடங்களுக்கு முன்பாக இளைஞர்கள் செய்த போராட்டம் தொடர்பாக கற்பிக்கப்பட்டது.
துணிச்சலற்ற நடவடிக்கைகளால் எங்களின் நகரத்துக்கு நாங்கள் அபகீர்த்தியை பெற்றுத்தர மாட்டோம் என ஏதென்ஸ் நகரம் தொடர்பான பாடத்தில் எங்களுக்கு கூறப்பட்டது.
இந்த கற்பித்தல் இருந்ததால் தான் 2022ஆம் ஆண்டு நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது நாட்டை நான் பொறுப்பெடுத்தேன். எனது ஆசானை போல ஒருவர் சஜித்திற்கு கிடைக்காததால் அவர் ஓடி ஒழிந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |