விடுதலையானாலும் நளினி உள்ளிட்டோர் குற்றாவளிதான்! தீர்ப்புக்கு பின்னர் வெளியான அறிவிப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் வாழ்நாள் முழுவதும் குற்றவாளிகளாகத்தான் உலா வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்புக்குள் நுழைய நான் பெரிதும் விரும்பவில்லை. நீண்டகாலமாக நடைபெறும் நிகழ்வு அது.
நளினி உள்ளிட்டோர் குற்றவாளிகள்தான்..
ஆனால், நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்தி இருக்கிறது. அவர்கள் குற்றமற்றவர்கள் அல்ல என நீதிமன்றம் சொல்லவில்லை. ஆயுள் தண்டனைக் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருப்பதாகக் கருதி அவர்களை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
எனவே, அவர்கள் வாழ்நாள் முழுவதும் குற்றவாளிகளாகத்தான் உலா வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அல்லது நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என விடுவிக்க வேண்டும். இது இரண்டுமே அவர்கள் விஷயத்தில் நடக்கவில்லை.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 36 இஸ்லாமிய இளைஞர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஏன் தமிழக சட்டமன்றம், தமிழகத்தில் இருக்கின்ற ஜனநாயக சக்திகள் அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரவில்லை.
அப்படி என்றால் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு பார்வை என செல்கிறதா? இது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.