மோசமான நிலையில் தோட்ட பாதைகள்! உடனடியாக புனரமைக்கக்கோரி கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்
நாகசேனை, ராணிவத்தை மற்றும் பம்பரகலை தோட்ட பகுதிகளுக்கு செல்லும் பாதைகளை உடனடியாக புனரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 26 ம் திகதி அப்பகுதி மக்களினால் கொட்டும் மழையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மோசமான நிலையில் பாதைகள்
இதன்போது போராட்டக்காரர்கள் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்,வரி செலுத்தும் மக்களுக்கு தரமான வீதி எங்கே? பாதையால் எம் உயிரை பறிக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாததால் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அன்றாடப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நான்கு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்தே செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாதைகளில் பல முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்ணொருவர் பயணத்தின் போது குழந்தையைப் பிரசவிக்க நேர்ந்ததாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்துக்கும் பிரதேச சபைக்கும் பலமுறை கடிதங்கள் மற்றும் முறைப்பாடுகள் சமர்ப்பித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
குறித்த பாதைகளை உடனடியாகப் புனரமைத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கையாகும்.
பொதுமக்களின் அழைப்பின் பேரில் போராட்ட இடத்துக்குச் சென்ற கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன், நீண்டகாலமாகத் தீர்வின்றி உள்ள பாதைப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போராட்டத்தில் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கச் செயலாளர் மதியழகன் மற்றும் உபதலைவர் பூவலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.





இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 19 மணி நேரம் முன்
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri