சம்பளப் பட்டியல்களை வெளியிடுங்கள்! அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
பொதுச் சேவையாளர்களின் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2026 டிசம்பர் மற்றும் 2027 ஜனவரி மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்களை சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.
மேலும் சம்பள அதிகரிப்பு கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், பொதுச் சேவையாளர்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முன்னரே, மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 2025 ஜனவரி மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் சம்பள அதிகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அடிப்படைச் சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்டம் 2027 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக பொதுச் சேவையாளர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாத்தியமான இடங்களில் மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலதிக சம்பள அதிகரிப்பு
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர், சுழற்காற்று டிட்வா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் ஆகிய எதிர்பாராத இரண்டு நெருக்கடிகளே பொருளாதார அழுத்தங்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.
எனினும், மேலதிக சம்பள அதிகரிப்பைக் கோருவது நியாயமற்றது எனத் தெரிவித்த அவர், 6,100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்திற்கும், மற்றொரு மூன்றில் ஒரு பங்கு ஏனைய செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

“2026 டிசம்பர் மற்றும் 2027 ஜனவரி மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு பொதுச் சேவையாளர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன்.
இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.