அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதுடன், பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிதியாண்டின் ஆரம்பத்திலிருந்தே அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தமது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மாதாந்தம் மீளாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி விளக்கம்
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் சமர்ப்பிக்கப்படும் திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும். நிதியாண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாமல் எஞ்சும் நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டு செல்ல வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கான கடன் உறுதிக் கடிதங்கள் (LC) திறக்கப்பட்டிருத்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
இல்லையெனில், ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். அதற்கான புதிய நிதி ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் பெரும்போக பருவப் பயிர்ச்செய்கைக்கான உர மானியம் வழங்குதல் மற்றும் அரச களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்பை முகாமைத்துவம் செய்தல் தொடர்பிலும், இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அடுத்த பருவ அறுவடை கிடைப்பதற்கு முன்னர் களஞ்சியங்களில் எஞ்சியுள்ள நெல் கையிருப்பை விற்பனை செய்வது அல்லது வேறு வழிகளில் பயன்படுத்துவது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக,
- - நெல்லை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்கள் மூலம் விநியோகித்தல்.
- - கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துதல்.
- - ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் ஆராயப்பட்டுள்ளன.

வரிச் சலுகைகள்
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வரிச் சலுகைகள் மாத்திரம் போதுமானதல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்குக் காணி ஒதுக்குவதற்குத் தற்போது சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத் தீர்வாக அரசுக்குச் சொந்தமான காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் அல்லது விசேட காணி வங்கியின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
முதலீட்டின் அளவு, உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விரைவாகக் காணிகளை ஒதுக்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டத்தில்
- - கிரிப்டோ நாணயங்களைக் கட்டுப்படுத்துதல்.
- - காப்புறுதித் துறையை டிஜிட்டல் மயமாக்குதல்.
- - பரிவர்த்தனைத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல்.
- - கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.