தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் - 11 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கிளிநொச்சி - பரந்தன், சிவபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது சொந்த மகளைத் தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று (25.11.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் தனது மகளைத் தவறான நடத்தைக்கு தந்தை உட்படுத்தியதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், சம்பவம் தொடர்பான சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
தொடர்ந்து, குறித்த வழக்கு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அரச சட்டவாதி எஸ். சிவஸ்கந்த சிறி நெறிப்படுத்தலில் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி வழக்கின் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இன்று (25) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி தர்மரட்ணம் கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சிறுமியைத் தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10,000 ரூபாய் இழப்பீடு செலுத்துமாறும், அதனைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.