சாதி குறிப்பிடும் திருமண விளம்பரங்களுக்குத் தடையா! அமைச்சு விளக்கம்
அமைச்சர் விளக்கம் சாதி குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்ததாக வெளியான ஊடகச் செய்திகளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள தெளிவுபடுத்தல் அறிக்கையில், அமைச்சரின் கருத்துக்களைச் சில ஊடகங்கள் முற்றிலும் தவறான அர்த்தத்தில் திரித்துக் கூறி, மக்களைத் திசைதிருப்பும் வகையிலான தலைப்புகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் தேசிய வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பதற்காக, கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறிய கருத்துக்களே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
சாதி போன்ற சமூக அடையாளங்களைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களால் சமூகத்தின் ஒரு பகுதியினர் துன்புறுத்தல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் உள்ளாவதால், இது குறித்து அரசாங்கம் தலையிட வேண்டுமா என ஊடகவியலாளர் வினவியிருந்தார்.
தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும் என இதற்கு, அமைச்சர் பதிலளித்திருந்தார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் மூடநம்பிக்கைகள், வசியம் மற்றும் மாந்திரீக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான தவறான விளம்பரங்கள் அதிகரித்துள்ளதாகவும், அவை சமூகத்தையும் இளைய தலைமுறையினரையும் மோசமாகப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இத்தகைய விடயங்களைக் கருத்திற்கொண்டே ஊடகங்களுக்கான ஒழுக்கக்கோவையை உருவாக்கும் சட்டம் குறித்து ஆராயப்படுவதாக அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.
மக்களின் மனநிலைகள் மாற வேண்டும். எந்தவொரு சமூகமும் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கி நகர்ந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் திருமண விளம்பரங்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கவோ, கேள்விக்குட்படுத்தவோ அல்லது தடை செய்யவோ எவ்வித நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அலுவலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan