இலங்கையில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதரி, சகோதரன் - லண்டனில் நெகிழ்ச்சி சம்பவம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த பிரித்தானியர்கள் இருவரின் நினைவாக நிறுவப்பட்ட அறக்கட்டளை ஊடாக நிதி திரட்டப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் உயிரிழந்த அமெலி மற்றும் டேனியல் லின்சே ஆகியோரின் நினைவாக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் வருடாந்த தொண்டு நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அங்கு இலங்கையின் 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லண்டனில் நிதி சேகரிப்பு
தமது அறக்கட்டளையின் முயற்சியால் ஏற்கனவே ஒரு அம்புலன்ஸ் வண்டி கொள்வனவு செய்யப்பட்டு, அது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டத்தில் உள்ளதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்திற்கு பிரத்தியேகமாக மற்றுமொரு அம்புலன்ஸ் வண்டியை வழங்குவதற்கான நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதுடன், உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்தவும், இலங்கையில் அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தவும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.
லண்டனை சேர்ந்த பிரித்தானிய இளையோரான 15 வயதுடைய அமெலி லின்சே மற்றும் அவரது 19 வயது சகோதரர் டேனியல் லின்சே ஆகியோர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர்.
பயங்கரவாத தாக்குதல்
தமது தந்தை மெத்யூ லின்சேயுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், அவர்களின் விடுமுறையின் இறுதி நாளன்று இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இத்தாக்குதலில் தந்தை உயிர் தப்பினார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவர்களின் மூத்த சகோதரர் டேவிட் லின்சே, தனது தங்கை மற்றும் தம்பியின் நினைவாக இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் சுகாதாரத் துறைக்காக 350,000 பவுண்டுகளைத் திரட்டிய டேவிட், இலங்கையின் ஒன்பது வைத்தியசாலைகளுக்கு 100 நோயாளர் இடமாற்றுப் படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிப்பட்ட துயரத்தை கருணை மற்றும் சேவையின் அடையாளமாக மாற்றிய லின்சே குடும்பத்தினரை, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri