29ஆம் திகதி வரை தொடரும் கனமழை..! பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பெய்து வரும் மழை எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும், இன்று(25.11.2026) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பல மாகாணங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலுவான ஈரப்பதன் மிக்க கீழைக்காற்றின் வீசுகை காரணமாகவே இம்மழை பெய்து வருவதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, தொடர்ச்சியாக அல்லாமல் இடையிடையே மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை முதல் பல பகுதிகளிலும் மழை பெய்யும். காலை 9.30 மணி முதல் நண்பகல் வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

காலை 11.30 மணியளவில் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவு வேளைகளில் வடக்கு மாகாணம் முழுவதும் மிதமான மழை அல்லது தூறல் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், முற்பகல் 11.00 மணியளவில் சில பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும். பிற்பகலில் மழை ஓரளவு குறைவடைந்தாலும் மாலை மற்றும் இரவு வரை தொடரும்.
மத்திய மற்றும் மேல் மாகாணங்கள்
மத்திய மாகாணத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். குறிப்பாகக் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் பகல் வேளையில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்பதுடன், கொழும்பு மாவட்டத்தில் பிற்பகல் வேளையில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள்
இரத்தினபுரி, கேகாலை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாளைய வானிலை எதிர்வுகூறல்
நாளை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் அம்பாறை நகரை அண்மித்த பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். அத்துடன், மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்திலும் சில மணிநேரங்கள் தொடர்ச்சியாக மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை)
நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை குறைவாகக் காணப்பட்டாலும், நண்பகல் முதல் மழை பெய்யத் தொடங்கும். குறிப்பாக வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் எனவும், உள்நாட்டுப் பகுதிகளில் நண்பகல் வேளையில் சற்றுக் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கண்டி, நுவரெலியா மாவட்டங்கள் உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். அனுராதபுரம், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பகல் வேளையில் சில மணிநேரங்கள் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 28 மற்றும் 29 திகதிகளில்..
எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் சற்றுக் கனமான மழை பெய்யக்கூடும். 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையத் தொடங்கும் என்று பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகளை அண்மித்த இடங்களில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடரும் மழையால் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.