சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சிறையில் உள்ள ஒருவருடன் 68 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குற்றவாளிகள் வெளியிட்ட வாக்குமூலத்தில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலரது பெயர்கள் வெளிவந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை(26.11.2026) இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம் தொடர்பாக எத்தகையை கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நடத்த நாம் தயாராக இருக்கின்றோம்.
ஆனால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஒன்று நாட்டுக்கு அவசியமாக உள்ளது. இன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகரித்துள்ளன.

எமது பொலிஸார் சிவப்பு மற்றும் நீல பிடியாணைகளின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்த சுமார் 70 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் இதற்கென ஒரு கொள்கையும் திட்டமிட்ட வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ், நிறுவனங்களைச் சுயாதீனமாகச் செயற்படச் செய்வதன் ஊடாக வெளிநாடுகளில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இலங்கைகைக்கு கொண்டுவந்துள்ளோம்.
அவர்களிடம் இருந்து பல வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த வாக்குமூலங்களில் சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனாலேயே சிலர் பதற்றமடைந்து கூச்சலிடுகின்றனர்.

குறிப்பாக, ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சிறையில் உள்ள ஒருவருடன் 68 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனவே இதுபோன்ற விடயங்கள் வெளிவரும் போது சிலர் பதற்றமடைவது இயல்பானதே. இது தனிப்பட்ட சிலரது நிலைமை தொடர்பான விடயமல்ல.
நாட்டின் மக்கள் எமக்கு வழங்கிய மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில், தேவையான சட்டங்கள் இல்லாவிட்டால் அவற்றை உருவாக்கியாவது நாட்டின் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்துகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.